ttv dinakaran appear to delhi police question asking to him

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசார் முன்பு டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜரானார்.

இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லியில் கைதான சுகேஷ் சந்திரசேகரன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சுகேசிடமிருந்து ரூ.1.30 கோடியையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சென்னை வந்த டெல்லி போலீசார் தினகரன் வீட்டிற்கு சென்று சம்மன் அளித்தனர். மேலும் இன்றைக்குள் டெல்லி வந்து நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

ஆனால் நேரில் ஆஜராக 3 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதற்கு டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்து குறிப்பிட்ட நாளில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் முன்பு ஆஜராவதற்கு விமானம் மூலம் டெல்லி வந்தார் டி.டி.வி.தினகரன்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகேஷ் சந்திரசேகர் எனக்கு யாரென்றே தெரியாது என தெரிவித்தார்.

இதையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் முன்பு நேரில் டிடிவி ஆஜரானார். அவர் தரப்பில் வாதாட வழக்கறிஞர் மகேஷ் நாயக் மற்றும் வைபவ் வர்மா ஆகியோர் வந்துள்ளனர். இதையடுத்து தினகரனிடம் விசாரணை தொடங்கியது.