ttv dinakaran appeal for two leaves
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் சார்பில் இன்று மேல் முறையீடு செய்யப்படுகிறது.
அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து இபிஎஸ் –ஓபிஎஸ் அணியின் சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தொடர்ந்த வழக்கை தலைமை தேர்தல் கமிஷன் விசாரித்து வந்தது.
டி.டி.வி.தினகரன் சார்பில் தங்களது அணிக்குத்தான் இரட்டை இலை என்று தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இரு தரப்பினர் தொடர்ந்த இந்த வழக்கை தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையம், அ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலைச்சின்னம் ஆகியவை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்த அணிக்கே சேரும் என்று தெரிவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்போவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்திருந்தார்.. அதன்படி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பு இன்று இரட்டை இலை சின்னம் தொடர்பாக மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த வாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக டி.டி.வி. தினகரன் தரப்பில் ஏதேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் அந்த வழக்கின் மீதான விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொண்ட பிறகே இந்த வழக்கின் மீதான முடிவை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
