டிடிவி தினகரன் அணிக்கு வழங்கப்பட்ட குக்கர் சின்னத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது வரவேற்கத்தக்கது என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார் தினகரன். இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் தங்களுக்கு குக்கர் சின்னத்தையும் அதிமுக அம்மா என்ற பெயரையும் ஒதுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்ககோரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. 

ஆனால் இபிஎஸ் ஒபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் டிடிவி தினகரன் அணிக்கு வழங்கப்பட்ட குக்கர் சின்னத்திற்கு இடைக்கால தடை விதித்தது. 

இந்நிலையில் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டிடிவி தினகரன் அணிக்கு வழங்கப்பட்ட குக்கர் சின்னத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது வரவேற்கத்தக்கது எனவும் குக்கர் வீட்டிற்குத்தான் தேவை, நாட்டிற்கு தேவையில்லை எனவும் தெரிவித்தார்.