அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பற்றி சமீபத்தில் ஒரு கமெண்ட் அடித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘எங்கே இருக்கிறது அந்தக் கட்சி? அதன் நிர்வாகிகளும், தொண்டர்களும் எங்களிடம் வந்து சேர்ந்துவிட்டனர்.  தினகரனோடு இருப்பது சில தொழில் அதிபர்கள்தான். அதனால் இணைப்புக்கு அங்கே ஒன்றும் இல்லை.’ என்றார் நெத்தியடியாக. அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர் என்று ஜெயக்குமார் சொன்னதை வழிமொழிந்திருக்கிறார் தினகரனின் வலது கரமும், அவரது கட்சியின் பொருளாளருமான வெற்றிவேல்.  இத்தனைக்கும் ஜெயக்குமாரின் மிகப்பெரிய எதிரிதான் இந்த வெற்றிவேல்.

 

ஏற்கனவே ஒரு ஆடியோவை வெளியிட்டு அவரை பேசுபொருள் ஆக்கியதோடு, மீண்டும் அவர் பற்றிய ஒரு ட்விஸ்ட்டை வெளியிட காத்திருக்கிறேன்! என்று ஜெயக்குமாரை தொடர்ந்து சீண்டும் நபர் இவர். அப்படிப்பட்டவர், ஜெயக்குமாரின் கருத்தை வழிமொழிந்ததுதான் ஆச்சரியம் பிளஸ் அதிர்ச்சி.  இது பற்றி வெற்றிவேல் சொல்லியிருக்கும் ஓப்பன்  ஸ்டேட்மெண்ட் இதுதான்....“எங்கள் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து பிரிபவர்கள் தி.மு.க.வுக்கு செல்வதை எங்கள் பொதுச்செயலாளர் தினகரன் விரும்பவில்லை.  செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், கலைராஜன் ஆகியோர் ஸ்டாலினிடம் தஞ்சம் புகுந்திருக்க கூடாது. காரணம் தி.மு.க. என்பது அம்மாவின் தொண்டர்களின் எதிரிக்கட்சி. பொய் வழக்கு போட்டு அம்மாவை சிறைக்கு அனுப்பியது அந்த கட்சிதான். அம்மா இறப்புக்கும் காரணம் அந்தக் கட்சிதான். 

அதனால் அக்கட்சிக்கு அம்மாவின் தொண்டர்களும், அம்மா கட்சியான அ.ம.மு.க.வின் நிர்வாகிகளும் செல்வதை தினகரன் விரும்பவேயில்லை. இனியும் எப்போதும் விரும்பமாட்டார். எனவேதான் அ.ம.மு.க.விலிருந்து பிரிபவர்கள் அ.தி.மு.க.வை நோக்கிச் செல்கின்றனர்.” என்று, எடப்பாடியாரிடம் தன் கட்சியினர் சரணடைவதையே தினகரன் விரும்புகிறார்! என்று வெற்றிவேல் சொல்லியிருக்கிறார். அதேவேளையில்....”தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதாக மத்தியரசு விருது கொடுத்திருக்கிறது. கொடுமை. தமிழகத்தில் எவ்வளவு மோசமான ஆட்சி நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். இதை மீறி விருது கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால், மற்ற மாநிலங்களில் இதைவிட மோசமான ஆட்சி நடக்கிறது என்றுதான் அர்த்தம் போல!  சிறையில் சசிகலா இப்போது ஆரோக்கியமாக இருக்கிறார். 

அவர் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாக இப்போது கெளப்பிவிடுகிறார்கள். குற்றம் சொல்வது முக்கியமல்ல, அதை நிரூபிக்க வேண்டும். சசிகலா சிறையில் இருந்தபோதுதான் அவரது இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. குறிப்பாக போயஸ் கார்டன் வீட்டில் ரெய்டு நடந்தபோது அங்கு யாருமே இல்லை. சசிகலா எந்தப் பதவியிலும் நேரடியாக இருக்காத போது, எப்படி இவ்வளவு பணம் வந்தது?  அமைச்சர்கள் செய்த தவறுகள், சின்னம்மாவின் தலையில் விழுந்திருக்கலாம்.” என்று ஒரே போடு போட்டு முடித்திருக்கிறார். ஆஹாங்!