தினகரனுடன் கூட்டணி என்று பேச்சுவார்த்தையை மக்கள் நீதி மய்யம் தொடங்க இருந்த நிலையில் ரஜினி எச்சரித்த காரணத்தினால் கமல் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.கவும் சரி தி.மு.கவும் சரி கமலை சீண்டக் கூட இல்லை. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் என்ன செய்வதென்றே தெரியாமல் கமல் விழித்து வந்தார். இந்த நிலையில் தான் ஆபத் பாந்தவனாக வந்து சேர்ந்தார் ஐ.ஜே.கே பாரிவேந்தர். புதிய அணியை கட்டமைக்கலாம் தினகரனை கூப்பிடலாம் தே.மு.தி.கவிடம் பேசலாம் என அடுக்கிக் கொண்டே போக கமலும் மயங்கிவிட்டார்.

இதனை தொடர்ந்து பாரிவேந்தர் தேமுதிகவில் தனக்கு உள்ள சோர்ஸ் மூலம் கூட்டணி பேச்சுக்கு முயற்சிக்க 3வது அணி என்கிற பெயரே தற்போது தங்களுக்கு அலர்ஜி என்று கூறி கதவை சாத்தியுள்ளார் பிரேமலதா. இதனை தொடர்ந்து தினகரன் தரப்பை அணுக, அவர்கள் இதற்காகவே காத்திருந்தது போல் ரத்தினக் கம்பளம் விரித்துள்ளனர். அதுவும் கமலும் கூட்டணிக்கு தயார் என்கிற ரீதியில் பச்சமுத்து தரப்பு கூற தினகரன் தரப்பு மிகவும் ஆர்வமானது.

 

கமல் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் முழுச் செலவையும் தாங்களே ஏற்கிறோம். கமல் கட்சி வேட்பாளர்களுக்கும் செலவை பார்த்துக் கொள்கிறோம் என்பது வரை தினகரன் தரப்பு ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளது. இந்த தகவல் கமல் கட்சியினரை எட்ட அனைவரும் சுறுசுறுப்பாகினர். கமல் கட்சி கேம்ப் மகிழ்ச்சியில் தத்தளித்தது. இந்த நிலையில் தான் ரஜினியிடம் இருந்து கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. தயவு செய்து தினகரனுடன் கூட்டணி வைக்க வேண்டாம். ஊழல் என்பதற்கு எதிராக கட்சியை ஆரம்பித்துவிட்டு தினகரனுடன் கூட்டணி வைத்தால் எதிர்காலமே இருக்காது என்கிற ரீதியில் ரஜினி பேசியுள்ளார். 

மேலும் அரசியலில் பொறுமை அவசியம் என்றும் கமலுக்கு ரஜினி அறிவுறுத்தியுள்ளார். இதனை அடுத்து தினகரனுடனான கூட்டணி பேச்சுக்கு உடனடியாக தடை போட்டுள்ளார் கமல். அதுமட்டும் இல்லாமல் இனி அப்படி ஒரு பேச்சே வரக்கூடாது என்று தினகரனை மறைமுகமாக சாடித் தள்ளியுள்ளார். எது எப்படியோ தமிழகத்தில் ரஜினி புண்ணியத்தில் 3வது அணி அமையும் முயற்சி முளையிலேயே கிள்ளி எரியப்பட்டுள்ளது.