ttv dinakaran accuses auditor s gurumurthy for being behind it raids
மயிலாப்பூர் அறிவுஜீவி என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துபவர், பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. அவர் தனது டிவிட்டர் பதிவுகளில் மயிலாப்பூர் அறிவு ஜீவி என்றும், பாபா சோர் பேட்டா சோர் என்றெல்லாம் குறியீட்டுச் சொற்களால் டிவிட்டர் பதிவுகளைக் கலக்குவார்.
இப்போது சுப்பிரமணியம் சுவாமியின் மயிலாப்பூர் அறிவு ஜீவி என்ற வார்த்தையை வெளியில் விட்டு வெளிப்படையாக்கியுள்ளார் டிடிவி தினகரன். இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, மயிலாப்பூர் அறிவுஜீவி மனப்பால் குடிப்பது ஒருபோதும் நடக்காது என்று கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தைச் சேர்ந்தவர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி. அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பிலான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் என்ற சுதேசி இயக்கத்தை நடத்தியவர். பத்திரிகையாளர், சிந்தனையாளர் என்று பன்முகம் கொண்ட அவருக்கு மத்தியில் உள்ள பாஜக., மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பும் உண்டு.
தமிழகத்தில், சிறந்த பத்திரிகையாளராகவும், மேல் மட்டத் தொடர்புடன் கூடிய தீர்க்கதரிசியாகவும் விளங்கியவர் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி. அவர் இருந்தவரையில் ஜெயலலிதா, கருணாநிதி என இருபெரும் தமிழக ஆளுமைகளை வழிகாட்டி ஆலோசனைகளைச் சொல்லி அரசியல் பங்காற்றி வந்தார்.
அவருக்குப் பின்னர் அந்த இடம் வெற்றிடமான நிலையில், இப்போது அந்த இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தி வரும் எஸ்.குருமூர்த்தியிடம் தமிழக அரசியல் மட்டத்திலும் தேசிய அரசியல் மட்டத்திலும் அரசியல் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டிடிவி தினகரன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த குருமூர்த்தி நினைப்பது தமிழகத்தில் ஒருக்காலமும் நடக்காது என காட்டமாகக் கூறியுள்ளார்.
தங்களது குடும்பத்திற்கு எதிராக செய்யப்படும் அனைத்தும் மத்திய அரசின் துணையோடு குருமூர்த்தி போன்றவர்களால் செய்யப்படுவதுதான் என்று தினகரன் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இத்தனை நாள் கூறிவந்த மயிலாப்பூர் அறிவுஜீவி யார் என்பதை, தினகரன் தற்போது வெளிப்படையாகச் சொல்லிக் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் மூலம் குருமூர்த்திக்கு நல்ல பலன் கிடைப்பதாக தினகரன் அடுத்தடுத்த குண்டுகளையும் வீசியுள்ளார்.
