நடந்து முடிந்த தேர்தலில் அமமுக படு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நிர்வாகிகள் பலரும் விலகி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில்  காஞ்சிபுரம் மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தினகரன், தேர்தல் தோல்விக்கான காரணம் உங்களுக்கே தெரியும். அதனால்தான் கடந்த மாதம்  நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்தேன். ஏனெனில் கட்சியில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் எனக்குத் தெரியும். தமிழகம் முழுவதும் சுற்றி வருபவன் நான். எனவே நிர்வாகிகள் மீது குறை சொல்ல வேண்டாம். 

மேலும், எனக்கு எதுவும் தெரியாது என நினைக்க வேண்டாம். தேர்தலின்போது சரியாகச் செயல்படாத நிர்வாகிகள், வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராதவர்கள் என அனைவரையும் எனக்குத் தெரியும். ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் கட்சிப் பதவிக்குப் பணம் வாங்க முயன்றார்கள். அதையெல்லாம் தடுத்து நிறுத்தினோம். அதற்காகவே மண்டல பொறுப்பாளர் பதவியை உருவாக்கினோம். மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளைத் தலைமையிடம் சொல்லவே அவர்களை நியமித்தோம்.  தவறு செய்வது தடுத்து நிறுத்தப்பட்டவர்கள்தான் மண்டலச் செயலாளர்கள் மீது குற்றம்சாட்டினர் என்றும் குறிப்பிட்டார்.

நம்மிடம் மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிமுகவில் இணைந்தார். அண்மையில் அவர் நம்முடைய நிர்வாகி ஏழுமலையைச் சந்தித்து, தான் தவறுசெய்துவிட்டதாக அழுதுள்ளார். இதனை என்னிடம் ஏழுமலை சொல்ல, அவர் மீண்டும் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்றுதான் நான் சொன்னேன். மேலும் தாண்டிக் குதித்துக்கொண்டு தினமும் தொலைக்காட்சியில் பேட்டியளித்துக் கொண்டிருந்தவர், என்னுடைய குடும்பமே அதிமுகதான் என்று கூறிக்கொண்டு தற்போது எங்கே இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரை கருணாநிதியின் நினைவிட பராமரிப்புக் குழுவில் உறுப்பினராக்கியுள்ளனர் என்று சொன்னார்கள்.  

மேலும் பேசிய அவர், தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது நீக்கம், பதவி மாற்றுவது வேண்டாம் என நினைக்கிறேன். கட்சியைப் பதிவு செய்த பிறகு அதைப் பார்த்துக்கொள்வோம். ஒழுங்கான நடவடிக்கை உள்ளவர்கள், கட்சிக்காக உழைப்பவர்கள் பதவியில் இருப்பார்கள். சரியில்லாதவர்களை உடனடியாக நீக்கிவிட்டுப் புதியவரை நியமித்துதானே ஆகணும். தெரியாமல் தவறு செய்தவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கிட்டு ஒழுங்கா செயல்படனும். எதிர்காலத்தில் வெற்றியை மட்டுமே நோக்கமா வச்சு செயல்படனும் என நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.