அதிமுகவிற்கோ, ஆட்சிக்கோ பிரச்சனை ஏற்பட்டால் சிப்பாய்களாக நின்று காப்பாற்றுவோம் என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். 

கோவை மண்டல அமமுக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரனை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்பு அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய புகழேந்தி டி.டி.வி. தினகரன் பின்னால் இனி பயணிக்க முடியாது. நமது கனவு பொய்த்துவிட்டது. இனி தினகரனால் அரசியலில் நிலைக்க முடியாது. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் தினகரன் யாரிடமோ விலை போய்விட்டர் என்று அர்த்தம். 

வேலூர், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி தேர்தலில் போட்டியிடாதது கட்சிக்கு பின்னடைவு. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அமமுகவின் சகாப்தம் முடிந்துவிடும். தினகரனை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன். டிடிவி தினகரனை போன்ற வஞ்சகம் மிக்க தலைவனை பார்த்தது இல்லை. சிரித்துக்கொண்ட இருப்பார். பின்னர் என்ன செய்வார் என்று தெரியாது. எந்த நேரத்திலும் தினகரன் கட்சியை கலைக்ககூடும் என்றார். 

மேலும், பேசிய அவர் அதிமுகவிற்கோ, ஆட்சிக்கோ பிரச்சனை ஏற்பட்டால் சிப்பாய்கள் போன்று நின்று காப்பாற்றுவோம். இரட்டை இலை சின்னத்தை இழிவுப்படுத்தி டி.டி.வி. தினகரன் பேசியதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று புகழேந்தி பேசினார். கடந்த மாதம் புகழேந்தி பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.