மக்களவை தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டு அதிமுக பட்டுவாடாக்களை நடத்தி வருவதால் அமமுக நிர்வாகிகள் தாய்கட்சிக்கு திரும்ப தயாராகி வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது.  


மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் வியூகங்களில் மூழ்கியுள்ளனர் அரசியல் கட்சித் தலைவர்கள். மக்களை கவரும் வகையில் பிரசார யுக்தியை கடைபிடிக்கவும் திட்டம் வகுத்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் தொகுதியில் பண பட்டுவாடாவுக்கு இப்பவே கட்சியினரை களம் இறக்கி விட்டிருக்கிறது அதிமுக தலைமை. ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு ஆள், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களை போட்டோவோடு வாங்கி வருகிறார்களாம். 

தேர்தல் அறிவித்து பிரசாரம் நடக்கும்போதே பட்டுவாடாவை தொடங்கி வெற்றிகரமாக முடித்து விடவேண்டும் என்பது தான், அதிமுகவின் திட்டம். வீட்டில் இருக்கும் பெண்களிடம் பேச்சுக் கொடுத்து, தேர்தல் வந்ததும் ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுப்பாங்க.. அதை இப்போதே வாங்கிக் கொள்ளுங்கள்.

என்று பேசி போட்டோவும் எடுத்துக் கொள்கிறார்களாம். இந்த போட்டோவை ஆதாரமாக வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அத்தோடு பணம் கொடுத்ததை தலைமைக்கு நிரூபிக்கவும் இந்த ஐடியாவை பின் பற்றி வருகிறார்களாம். இது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்ட தொகுதி என்பதால், வெற்றி ஒன்றே தீர்மானம் என்ற குறிக்கோளில் பண பட்டுவாடாவுக்கான ஆயத்த பணியில் இறங்கி இருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

இதை பார்த்த டி.டி.வி.தினகரன் கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ’இங்கே இருப்பதை விட அங்கே போனால் நமக்கு பல லட்சம் கிடைக்கும்...’ என்கிற ஆசையில் தாவலுக்கு தயாராகி வருகிறார்கள் என்கிறார்கள் சேலம் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.