ஜெயலலிதா, சசிகலாவை விட தன்னை பெரிய தலைவராக டி.டி.வி.தினகரன் நினைத்துக் கொண்டிருக்கிறார் என அமமுக நிர்வாகி வைத்தி தெரிவித்துள்ளார்.

அமமுகவில் நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள அமமுக தென்சென்னை மாவட்ட கழக துணை செயலாளரான வைத்தி இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘’தன்னை அம்மாவை விட பெரிய ஆள்னு நினைச்சுக்கிட்டு இருக்கார் டி.டி.வி. தங்க தமிழ்ச்செல்வன் கட்சியை விட்டு எப்போதோ போயிருப்பார். டி.டி.வி திஹார் ஜெயிலில் இருக்கும்போது நாஞ்சில் சம்பத், நாங்கள் எல்லாம் தெருத் தெருவாக சுற்றி திரிந்தோம். நாஞ்சில் சம்பத்தை டி.டி.வி தினகரன் உதவியாளர் ஜனாவை விட்டு துரத்தினார்கள். 

அம்மா, சின்னம்மாவை விட பெரிய தலைவரா நீ. டி.டி.வியை பற்றி திவாகரன் சொன்னபோதுகூட நாங்கள் நம்பவில்லை. நீயெல்லாம் திருந்தி இருப்பாய் என நினைத்தோம். ஆனால், திருந்தவில்லை. ஆட்சியை அமைப்போம் எனச் சொல்லி இருந்தால் அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்கள் வந்திருப்பார்கள். ஆனால், ஆட்சியை ஒழிப்போம் எனச் சொன்னதால்தான் எம்.எல்.ஏக்கள் வரவில்லை. 

மோடியை எதிர்த்து பேச டி.டி.வி. பயப்படுகிறார். நான் தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லும்போது மோடியை விமர்சித்ததால் என்னை போகவிடாமல் தடுத்து விட்டார். மோடியை பற்றி பேசினால் தேவையில்லாத பிரச்னைகள் வரும் எனக் கூறுவார். மோடிக்கு ஓ.பிஎ.ஸ்- இபிஎஸ் எல்லாம் பயப்படுவதாக சொல்கிறார் டி.டி.வி. ஆனால், அவரே பயந்து நடுங்கிறார். வெளியில் தான் வீராப்பாக இருப்பதாக காட்டிக் கொள்கிறாரே தவிர உள்ளுக்குள் டி.டி.விக்கு அவ்வளவு பயம்'' என அவர் தெரிவித்தார்.