நாடாளுமன்ற தேர்தலில் தனது தலைமையை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி என்று டி.டி.வி தினகரன் திடீரென அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி, செல்லும் இடங்களில் எல்லாம் திரளும் அ.ம.மு.க தொண்டர்கள், பண பலம் போன்ற காரணங்களில் டி.டி.வியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ், பா.ம.க., போன்ற கட்சிகள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகின. தினகரனும் எம்.பி., தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டி என்று வெளிப்படையாக அறிவித்தார். மேலும் 15 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் தினகரன் கூறினார்.

இதனை தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., தவிர்த்து பல்வேறு கட்சிகளும் தினகரன் தரப்பை தொடர்பு கொள்ள ஆரம்பித்தன. பேசியவர்கள் அனைவருமே சின்ன அய்யா உங்களை பேச வருமாறு அழைக்கிறார், டெல்லிக்கு வர முடியுமா? என்கிற ரீதியிலேயே கேட்க ஆரம்பித்துள்ளனர். அதாவது தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேசலாம் வாருங்கள் என்று தினகரனுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் தொகுதி ஒதுக்கீடு என்பது பரஸ்பர பேச்சாக இருக்க வேண்டும், யாரும் யாருக்கும் ஒதுக்கும் வகையில் இருக்க கூடாது என்கிற ரீதியில் பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்த பேச்சு தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் தற்போதைய தனது செல்வாக்கு மற்றும் கட்சி கட்டமைப்பு போன்றவற்றை கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனது தலைமையில் கூட்டணி அமைக்க தினகரன் திட்டமிட்டார். மேலும் தனது தலைமையில் கூட்டணி அமைந்தால் தான் சட்டமன்ற தேர்தலிலும் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த முடியும் என்பது தினகரன் கணக்கு.  ஆனால் கூட்டணி குறித்து பேச ஆரம்பிப்பவர்கள் தன்னை ஒரு இரண்டாம் கட்ட தலைவர்கள் போல் நினைப்பதை தினகரன் விரும்பவில்லை. 

இதனால் தான் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தன்னுடன் கூட்டணி குறித்து பல்வேறு கட்சியினரும் பேசி வருவதாக வெளிப்படையாக கூறினார். ஆனால் எந்த கட்சியில் இருந்து பேசுகிறார்கள் என்று தற்போது கூற முடியாது என்று தெரிவித்த தினகரன், அ.ம.மு.க தலைமையை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி அமைக்க முடியும் என்றும் அறிவித்தார். அதாவது தொகுதிகளை ஒதுக்கும் கட்சியாக அ.ம.மு.க இருக்கும் அதனை வாங்கிச் செல்பவர்களே கூட்டணி கட்சியனராக இருப்பார்கள் என்பதை தான் மறைமுகமாக தினகரன் கூறியுள்ளார்.

மேலும் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்றாலும் 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க தனித்து போட்டியிடும் என்றும் தினகரன் தடாலடியாக அறிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ், பா.ம.க போன்ற கட்சிகள் தினகரனை தேடிச் சென்று கூட்டணி குறித்து பேசுவார்களா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.