டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட மோதல்கள் வெளியே வராத போதே திமுகவில் சேரப்போகிறார், ரஜினி கட்சியில் கலக்கப் போகிறார், அதிமுகவிற்குள் ஒதுங்கப் போகிறார் என தங்க தமிழ் செல்வனைச் சுற்றி வலம் வந்த பேச்சுகள் தினகரனுடனான மோதல் வெளிச்சத்திற்கு வந்த பிறகு மேலும் வலுவடைந்து இருக்கின்றன.  

தங்க தமிழ்ச்செல்வன் தாராளமாக அதிமுகவிற்கு வரலாம் என ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் போன்றோர் அழைப்பு விடுத்து இவுந்தாலும் கரூரிலும் சேப்பாக்கத்திலும் தங்க.தமிழ்ச்செல்வனை அதிமுகவில் சேர்க்கக் கூடாது என சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. தேனி அதிமுக நிர்வாகிகள் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு எதிராக வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிடுகிறார்கள்.  

இந்த இடத்தில் அதிமுகவிற்குள் தங்க.தமிழ்ச்செல்வன் வந்தால் தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸுக்கும், அவரது மகனுக்கும் இருக்கும் செல்வாக்கு சரியும் என்பதால் ஈ.பி.எஸ் தரப்பு வரவேற்கிறது என்றும் எடப்பாடி கை தென்மாவட்டங்களிலும் வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக ஓ.பி.எஸ் தரப்பு எதிர்க்கிறது என்றும் கூறப்படுகிறது.

தங்க.தமிழ்செல்வனின் இருப்பு அதிமுகவிற்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தங்க.தமிழ்செல்வனுக்கு அதிமுகவில் இடம் இருக்கிறதா? இல்லையா? என்பதை வைத்தே இரட்டைத் தலைமைகளில் யாரிடம் கட்சியின் பிடி இருக்கிறது என தெரிந்து கொள்ளமுடியும் என்று காத்திருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதே போல செந்தில்பாலாஜிக்கு இருக்கும் செல்வாக்கு தங்க.தமிழ்ச்செல்வனுக்கு இல்லை என திமுக கருதுவதாலும் தங்கள் கட்சிக்குள் இணைக்க விரும்புபவரை பொது வெளியில் பேச விடாமல் சட்டென கட்சிக்குள் கொண்டுவரும் வழக்கத்தை ஸ்டாலின் தலைமையிலான திமுக கொண்டிருப்பதாலும் தங்க தமிழ்ச்செல்வனை திமுக விரும்பவில்லையோ என்கிற சந்தேகமும் எழுகிறது.

இவை எல்லாம் ஒருபுறமிருக்க தற்போது எந்த கட்சிக்கும் செல்லும் எண்ணமில்லை என்று கூறியிருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் சசிகலாவை சந்திக்கும் வாய்ப்புக்காகக் காத்திருப்பதாக பத்திரிகையாளர்களிடம் கூறுகிறார். இந்த இடத்தில் தினகரனை மீறி சசிகலாவிடம் பேசி தனக்கான நியாயத்தை அமமுகவில் பெற்றுவிட முடியும் என்பதாலேயே அமமுகவில் தொடர விரும்புகிறாரா அல்லது தனது பேரத்தை மற்றக் கட்சிகளிடம் கூட்டுவதற்காக இப்படி பேசுகிறாரா? என்பதை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.