அதிமுக எம்எல்ஏவாகவே செயல்படுவேன் என அறந்தாங்கி தொகுதி உறுப்பினர் ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக அதிமுக அதிருப்தி எம்எல்ஏவாக செயல்பட்ட இவர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதராவாக இருந்து வந்தார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘’தடுமாறி போய் இருந்த என்னை மீண்டும் அதிமுகவில் இணைத்த பெருமை அமைச்சர் விஜயபாஸ்கரையே சாரும். டி.டி.வி.தினகரன் கட்சி தொடங்கியவுடன் நான் உள்பட மூவரும் விலகிவிட்டோம். அமமுகவையும் டி.டி.வி.தினகரனையும் மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். இனி அதிமுக எம்எல்ஏவாக செயல்படுவேன். அதிமுக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அதனால்தான் மீண்டும் இணைந்தேன்.

கட்சியும் சின்னமும் இங்கே இருப்பதால் இதுதான் உண்மையான அதிமுக என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். என்னை போல் பிரபுவும் கலைச்செல்வனும் மீண்டும் தாய்க்கழகத்துக்கே திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என அவர் தெரிவித்தார். 

இடையில் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் எனக் கூறினீர்களே... இப்போது உங்கள் நிலை என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரே இடத்தில் இருக்க வேண்டும்’ எனக்கூறினார்.