கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க சதி நடப்பதாக அமைச்சர் சிவி சண்முகம் கூறியிருந்த நிலையில், தற்போது அதிமுகவை உடைக்க முயற்சி நடைபெறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக டிசம்பர் முதல் வாரத்தில் அறிவித்தார்.அப்போது முதலே பாஜக அதிமுகவிடம் இருந்து டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் செய்ய ஆரம்பித்தது. இதற்கு காரணம் தமிழகத்தில் ரஜினி தலைமையில் அமையும் கூட்டணியில் பாஜக சேர விரும்பியது தான். தமிழகத்தை பொறுத்தவரை அ திமுக மற்றும் திமுக கூட்டணிகள் தான் பலம் வாய்ந்தவை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு கட்சி இந்த இரண்டு கூட்டணிகளில் ஏதாவது ஒன்றில் தான் இடம்பெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டும் பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.

எனவே அதிமுக கூட்டணியில் நீடித்தால் வெற்றி பெறுவது உறுதி அல்ல என்று பாஜக கருதி வருகிறது. அதே சமயம் திமுக கூட்டணியில் பாஜகவிற்கு வாய்ப்பு இல்லை. அதே சமயம் சட்டமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று பாஜக கணக்கு போடுகிறது. இதற்குத்தான் பாஜக ரஜினியின் வருகையை பயன்படுத்திக் கொண்டு அவருடன் கூட்டணி வைத்தால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று வியூகம் வகுத்தது. அதாவது தமிழகத்தில் ரஜினி தலைமையில் 3வது அணி அமைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியாது. திமுக – அதிமுக – ரஜினி என மூன்று அணிகள் இருந்தாலும் ரஜினி முதல் இடத்திற்கு வருவது கடினம்.

எனவே தேர்தல் களத்தை திமுக – ரஜினி இடையே மாற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அதாவது திமுக அசுர பலத்துடனும் கட்டமைப்புடனும் உள்ள கட்சி. எனவே அந்த கட்சியை குறுகிய காலத்திற்குள் உடைக்க முடியாது. அதே சமயம் அதிமுக தற்போது அப்படி இல்லை என்று பாஜக கருதுகிறது. அதிமுகவில் தற்போதும் எடப்பாடி – ஓபிஎஸ் என இரண்டு அணிகள் உள்ளன. இந்த அணிகளில் எடப்பாடி அணி பலமாக உள்ளது. ஓபிஎஸ் அணி பலவீனமாகவே உள்ளது. ஆனால் டெல்லி தொடர்புகள் மூலம் ஓபிஎஸ் கட்சிக்குள் தனது விருப்பங்களை நிறைவேற்றி வருகிறார்.

அதே டெல்லித் தொடர்புகள் தான் ஓபிஎஸ் மூலம் அதிமுகவை உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட்டால் சட்டமன்ற தேர்தலில் திமுக வெர்சஸ் ரஜினி என களத்தை மாற்றிவிடலாம் என வியூகம் வகுத்துள்ளது. ஓபிஎஸ் ஏற்கனவே ஒரு முறை கட்சியை உடைத்தார். அப்போது அவருடன் கட்சியில் வெறும் 10 சதவீத நிர்வாகிகள் கூட செல்லவில்லை. ஆனால் டெல்லி தொடர்புகள் மூலம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை அவர் முடக்கினார். தற்போதும் அதிமுகவில் இருந்து சொற்ப நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்சை அழைத்து வந்து சின்னத்தை முடக்கிவிட்டால் போதும், தேர்தலில் திமுக – ரஜினி என்றாகிவிடும் என டெல்லி கணக்கு போட்டுள்ளது. இதனை மனதில் வைத்து தான் இரட்டை இலையை முடக்க முயற்சி நடைபெறுவதாக சிவி சண்முகம் கூறியுள்ளார்.

ஆனால் ரஜினி அரசியல் கட்சி துவங்கவில்லை என்று அறிவித்த காரணத்தினால் இந்த திட்டம் பிளாப்பாகிவிட்டது. இந்த சூழலில் தான் அதிமுகவை உடைக்க முயற்சி நடைபெற்றதாகவும் அதனை தாங்கள் தடுத்துவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.