கலைஞர் உடல்நிலை தற்போது சீராக உள்ள நிலையில் அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர அமெரிக்காவில் இருந்து டாக்டர்களை அழைத்து வருவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கடந்த ஒன்றரை வருடங்களாக வீட்டில் மருத்துவ ஓய்வில் இருந்த கலைஞருக்கு கடந்த  வாரம் டிரக்யோஸ்டமி கருவி மாற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட தொற்றை தொடர்ந்து கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. 103 டிகிரி அளவிற்கு காய்ச்சல் அதிகம் இருந்த காரணத்தினால் கலைஞர் சுய நினைவை இழந்தார். மயங்கிய நிலையில் இருந்த கலைஞருக்கு வீட்டில் வைத்தே காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தான் கடந்த வெள்ளியன்று இரவு திடீரென கலைஞருக்கு ரத்த அழுத்தம் மிக கடுமையாக குறைந்தது. வழக்கமாக இருக்க வேண்டிய ரத்த அழுத்தத்தை விட மிகவும் குறைந்த காரணத்தினால் உடனடியாக கலைஞர் காவேரி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 20 நிமிடங்கள் தொடர் சிகிச்சையில் கலைஞரின் ரத்த அழுத்தம் சீரானது. ஆனாலும் அவர் தொடர்ந்து சுயநினைவு இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கலைஞரின் உள் உறுப்புகள் அனைத்தும் நல்ல நிலையில் இருக்கிறது. காய்ச்சல் மட்டும் நோய் தொற்று, வயது மூப்பு போன்ற காரணங்கள் தான் அவருக்கு பிரச்சனையாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அவரை சுயநினைவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் 95 வயது ஆகிவிட்டதால் கலைஞருக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் டாக்டர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கலைஞருக்கு சிகிச்சை அளிக்க வெளிநாட்டில் இருந்து மருத்துவரை வரவழைக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் யோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு காவேரி மருத்துவமனை நிர்வாகமும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றும் வயது மூப்பு தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் உதவியை கலைஞர் குடும்பத்தினர் நாடியுள்ளதாக சொல்லப்படுகிறது.