போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் போராட்டத்தை கைவிட்ட வீடு திரும்ப முன்வருவதுடன், தொடர்ந்து பேச்சு வார்த்தைகளின் மூலம் பிரச்சனைகளை சமூகமாக தீர்க்க முன்வர வேண்டும் என  மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகோயோர் வலியுறுத்தியுள்ளனர். 

மத்திய அரசு கடந்த செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய, இது விவசாயிகளுக்கு எதிரானது எனவும் உடனே இச்சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி நாடு முழுதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி முற்றுகைப் பேரணி நடத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். டெல்லிக்கு வெளியே சிம்கு எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், டிஆர்எஸ், இடதுசாரிகள், திருணாமுல் காங்கிரஸ், சிவசேனா, திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் விவசாய அமைப்பினரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது போக்குவரத்து இடையூறு மற்றும் சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஒத்துழைக்குமாறு அமித்ஷா விவசாயிகள்  சங்க பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் இச்சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் பிடிவாதமாக இருந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. மேலும் விவசாயிகள் போராட்டத்தை தேசிய அளவில் தீவிரப்படுத்தவும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இன்றுடன் 16வது நாளை இந்த போராட்டம் எட்டியுள்ளது. இந்நிலையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு மத்திய அரசின் திட்டங்களை ஏற்க வேண்டுமென வலியுறுத்தி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு மத்திய அரசுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது: 

இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படும் என தவறான கருத்து நிலவுகிறது, ஆனால் இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்கிறதே தவிர அவர்களுடைய நிலங்களை இந்தசட்டத்தால் எந்த வகையிலும் பறிக்க இயலாது என்பதை உறுதி கூறுகிறோம். இந்த சட்டத்தின் அடிப்படையில் எந்த விவசாயிகளும் வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்படமாட்டார்கள். அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு இந்த சட்டம் அனுமதிக்கிறது, அதேபோல் தாங்கல் உற்பத்தி செய்கின்ற பொருட்களை ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு விற்பதும் அல்லது அதை விட அதிக லாபம் கிடைக்கும் வெளி மார்க்கெட்டுகளில் விற்பதா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் விவசாயிகளுக்கு உள்ளது. விவசாயிகள் முடிவு செய்துகொள்ள முடியும், அந்த சுதந்திரத்தை விவசாயிகளுக்கு இந்தச் சட்டம் வழங்குகிறது. இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்பாக வழங்கப்படுகிறதே தவிர இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டை செயல்பட வேண்டும் என நிர்பந்திக்கவில்லை. 

இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகள்  உற்பத்திப் பொருட்களின் விலை உறுதி செய்யப்படுகிறது என்பதே இந்த சட்டத்தின் சிறப்பாகும். இந்த சட்டத்தால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எதிர்த்து விவசாயிகள் நீதிமன்றத்தை அணுக முடியும், அதற்கான சுதந்திரமும் இந்த சட்டத்தில் உள்ளது. விவசாயிகள் மற்றும் அவர்களது நிலத்திற்கான பாதுகாப்பு எந்த வகையிலும் கேள்விக்குறியாகாது என்பதை எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்ட அரசு தயாராக உள்ளது. மேலும் விவசாயிகள் வைக்கும் கோரிக்கைகளை கணக்கில் எடுத்து இந்த சட்டங்களில் திருத்தம் செய்யவும் அரசு தயாராக உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரவும் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யவும் மத்திய அரசு தயாராக உள்ளது. அதை எழுத்துப்பூர்வமாக தருவதற்கும் அரசு தயாராக இருக்கிறது. இச்சட்டத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதுடன், இந்திய பொருளாதாரம் வளர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. 

 

அதைபோல் இது கொரோனா தொற்று காலம் என்பதாலும், குளிர்காலம் என்பதாலும் வைரஸ் தொற்று வேகமாக பரவ வாய்ப்பு இருக்கிறது, எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சகோதரர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப வேண்டும், தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும். அரசும் விவசாய சங்கங்களும் இணைந்து ஒரு இணக்கமான முடிவை எட்ட முன்வர வேண்டும். இந்த அரசு முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக அர்ப்பணித்துக் கொள்ளப்பட்ட அரசு, எனவே பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும், விவசாயிகள் நம் பாரதப் பிரதமர் மோடியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், விவசாயிகள் சட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு உறுதியாகும் தயவு கூர்ந்து போராட்டத்தை கைவிடுங்கள் மோடி அரசு உங்களுக்கானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.