ஸ்டாலின் நடத்துவது கிராம சபை கூட்டம்  அல்ல குண்டர் சபை கூட்டம் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை ராயபுரம் பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் குறைந்து வருவதாகவும், அனைத்து தொழில்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும், மருத்துவ நிபுணர்கள் குழு அறிவிப்பின் படி தான் திரையரங்கில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும் கூறினார். மேலும், மத்திய அரசு கடிதம் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறிய அவர், மாநில சுகாதாரத்துறை மருத்துவர்கள் தலை சிறந்த மருத்துவர்கள் இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலின் முதல்வர் நினைப்பில் வாழ்ந்து வருவதாகவும், அவர் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், 
ஸ்டாலின் நடத்துவது கிராம சபை அல்ல குண்டர் சபை எனவும் குற்றம்சாட்டினார். கிராம சபை கூட்டத்தை கிராமத்தில் தான் நடத்த வேண்டும் என குறிப்பிட்ட அவர், யோகா மாஸ்டர் போல் உட்கார்ந்து கொண்டு கிராமத்தின் பெயர் தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துகிறார் ஸ்டாலின் எனவும் விமர்சனம் செய்தார். அடக்கு முறையின் ஒட்டு மொத்த ஆட்சி திமுக தான் என்றும், ஜனநாயக படுகொலை செய்தது திமுக தான் எனவும், சிறுபான்மையின மக்களை முழுமையாக வேட்டையாடிய அரசு திமுக அரசு, அதிமுக அரசு காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் கூறினார். 

கமல்ஹாசன் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர், முரண்பாட்டின் மொத்த உருவம் கமல்ஹாசன் எனவும், 
கமல்ஹாசனுக்கு எப்போதுமே மாமனார் வீட்டு நியாபகம் தான் வரும் என்றும், உலக நாயகன் பட்டமே தயாரிப்பாளர்கள் கொடுத்த பணத்தால் வந்தது தான் எனவும் அவர் தெரிவித்தார். கமல் சொந்த பணத்தில் இருந்தா இல்லத்தரசிகளுக்கு கொடுப்பார்? என கேள்வி எழுப்பிய அவர், 
மக்கள் வரி பணத்தில் தானே கொடுக்க வேண்டும் என்றும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கமல்ஹாசன் அள்ளி வீசி வருவதாகவும் குறிப்பிட்டார். பொள்ளாட்சி விவகாரம் தொடர்பான கேள்விக்கு. சி.பி.ஐ தன் கடமையை செய்துள்ளதாகவும்,  யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை பெற்றாக வேண்டும் என்றும், சி.பி.ஐ தக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளித்தார். 

திமுகவில் ஒரு ஸ்டாலின் என்றால் அமெரிக்காவில் ஒரு ஸ்டாலின் என்றும், அமெரிக்காவில் ஜனநாயக படுகொலை ஈடுபட்டுள்ளது என்றால் அங்கும் ஒரு ஸ்டாலின் உள்ளார் என்று தான் அர்த்தம் என்றும் அவர் கேலி செய்தார். பா.ம.க போராட்டம் அக்கட்சியினரை உற்சாகப்படுத்து வதற்காகவே என கூறிய அவர், ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை உள்ளது போல் பா.ம.கவிற்கும் கொள்கை இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.