திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமானதால் காவேரி மருத்துவமனை முன்பு திரண்ட தொண்டர்கள் கண்ணீருடன் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவர்கள் தங்களது சட்டை முழுவதும் கலைஞர் வாழ்க… நீங்கள் நூறாண்டுகள் வாழ வேண்டும் என எழுதி வைத்து முழக்கமிட்டு வருகின்றனர்.

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து  அன்று நள்ளிரவு  காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன. அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்  காந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேவேகவுடா, பினராயி விஜயன், சந்திரபாபு நாயுடு , நித்தின் கட்கரி  மற்றும்  ரஜினிகாத், கமல்ஹாசன் உள்பட திரையுலக பிரபலங்கள் காவேரிக்கு வந்து  உடல்நலம் விசாரித்து சென்றனர்.இந்த நிலையில்  கருணாநிதியின்  உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காவேரி மருத்துவமனையும் இதை உறுதி செய்தது. இதனால் காவேரி மருத்துவமனை முன் மீண்டும் திமுக தொண்டர்கள் கூடி முழக்கமிட்டு வருகின்றனர்.  நூற்றுக்கணக்கான தொண்டர்கள்  தங்களைது தலைவரின் உடல்நிலை குறித்து அறிய மிகுந்த கவலையுடன் கூடியுள்ளனர். எழுந்து வா தலைவா… மீண்டும் அறிவாலயம் வா தலைவா… எமனே இங்கிருந்து ஓடிப்போ என முழக்கமிட்டு மீண்டும் அங்கே கூடி வருகிறார்கள்.  மேலும் அவர்கள் தங்களது சட்டை முழுவதும் கலைஞர் வாழ்க… நீங்கள் நூறாண்டுகள் வாழ வேண்டும்… முரட்டு பக்தர்கள்  என எழுதி வைத்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.