உண்மையான விசுவாசம் எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காது; சந்தர்ப்பவாத விசுவாசம் உண்மையாகவே நடந்து கொள்ளது!..என்பார்கள். அது ஜெயலலிதாவின் நினைவேந்தல் நிகழ்வில் நிரூபணமாகி உள்ளது.

நேற்று ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள். இதனால் மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏராள பொதுமக்கள் சென்றனர். ஆனால் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட அக்கட்சி வி.ஐ.பி.க்கள் (!?) அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முடியவில்லை என்பதால் பொதுமக்களை தடுத்து நிறுத்தி காக்க வைத்தனர். 

ஒருவழியாக வந்து சேர்ந்த அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் அஞ்சலி ஜெ.,க்கு செலுத்தும் போது வெறும் தள்ளு முள்ளுகளும், கூச்சல் குழப்பங்களும்தான் நிகழ்ந்ததே தவிர யாரும் கண்ணீர் விடவுமில்லை, கதறவுமில்லை. சம்பிரதாயத்துக்கு மண்டியிட்டு வணங்கி, உறுதி மொழி என்ற பெயரில் கட்சி வளர்ச்சி பற்றி ஒன்றை வாசித்துவிட்டு கலைந்து அரசு கொடுத்திருக்கும் சொகுசு காரிலேறி, போலீஸ் பாதுகாப்பு சூழ பறந்தனர். 

இவர்கள் ஜெயலலிதாவால் சீட் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவரது முகத்தால் ஜெயித்து, அமைச்சர்! எம்.பி.க்கள்! எம்.எல்.ஏ.க்கள்! கட்சியின் மாவட்ட செயலாளர்! வாரிய தலைவர்! உள்ளிட்ட பல பதவிகளை அடைந்தவர்கள். ஜெயலலிதா கொடுத்த வாழ்வால் கோடி கோடியாய் சம்பாதித்து தங்களின் பல பரம்பரையும் தவிப்பில்லாமல் வாழ செட்டில் செய்து வைத்திருப்பவர்கள். ஆனால் இவர்கள் கண்ணில் கண்ணீரில்லை. 

ஆனால் இவர்கள் சென்ற பிறகு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் ஆட்டு மந்தைகள் போல் திறந்துவிடப்பட்டனர். அம்மாவின் கல்லறை தேடி ஓடோடி வந்த அந்த மக்களில் பலர் இருவேளை சோறு கூட நிரந்தரமில்லாத பராரிகள். கிளை செயலாளர் பதவியை கூட பெற முடியாத அரசியல் அடிமைகள், ஜெயலலிதாவை நேரில் ஒரு முறை கூட பார்த்திராத அவரது அபிமானிகள், எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்தவர் என்பதற்காகவே ஜெ., மீது பாசம் கொட்டியவர்கள்.

இவர்களில் பலர் தலையிலும், வாயிலும் அடித்துக் கொண்டு கதறி அழுதனர். ‘எந்தாயீ போயிட்டியே! எங்க மகளே போயிட்டியே!’ என்று அவர்கள் கதறியபோது மெரீனாவே தனது அலைகளின் சப்தத்தை குறைத்திருக்கும். பல போலீஸார் இவர்களின் கண்ணீரை கண்டு கலங்கிவிட்டனர். 

ஜெயலலிதா இவர்கள் யாருக்கும் தனிப்பட்ட முறையில் எதுவும் செய்ததில்லை. இவர்கள் 99.9 சதவீதத்துக்கும் அதிகமானவர்களை கண்ணால் கண்டிருக்கவும் மாட்டார். ஜெ., ஆட்சியில் ரேஷனில் இலவசமாக போடப்படும் அரிசியை வாங்கிட கூட ரேஷன்கார்டு இல்லாத பிளாட்ஃபார்ம் வாசிகளும் அதில் பலர். இவர்கள் அழுததெல்லாம் அன்பின் மிகுதியால்தானே தவிர வேறொன்றுமில்லை.

இந்த கூவலுக்காக அவர்களுக்கு எந்த கூலியும் கிடைக்கவில்லை. கால்நடையாக, பஸ் பிடித்து, ஷேர் ஆட்டோ பிடித்து, சொந்த காசில் பெட்ரோல் போட்டு என்று அடித்துப் பிடித்து வந்த கூட்டம். 
இதுவரை இந்த உள்ளங்களின் பரிசுத்தமான அன்பை அறிந்திராத ஜெயலலிதாவின் ஆன்மா மெரீனா கரையோரம் அமர்ந்து இப்போது வரை அழுதுகொண்டுதான் இருக்கும் நிச்சயம்.