தனி தெலங்கானா மாநிலம் அமைந்தால் பல்வேறு கோவில்களுக்கு வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டதையடுத்து தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ்,  விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டார். இதையொட்டி அம்மனுக்கு ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மூக்குத்தி காணிக்கை செலுத்தினார்.

தனி தெலங்கானா மாநிலம் அமைந்தால், பல்வேறு கோயில்களுக்கு தனது குடும்பத்துடன் நேரில் வந்து நேர்த்திக் கடன் செலுத்துவதாக தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் வேண்டியிருந்தார்.

இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு   தெலங்கானா மாநிலம் அமைந்தது. அப்போது  நடைபெற்ற பொதுத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி சார்பில் சந்திர சேகரராவ் வெற்றி பெற்று முதலமைச்சரானார்.

இந்நிலையில், தனித் தெலங்கானா அமைந்ததைத் தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி மதிப்பில் சாலிக்கிராம ஹாரத்தை சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு காணிக்கையாக வழங்கினார். மேலும், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கும் வைர மூக்குத்தியை அவர் காணிக்கையாக வழங்கினார்.

இதுதவிர, வாரங்கல் பத்ரகாளி அம்மனுக்கு தங்க கிரீடம், குருவி பகுதியில் உள்ள வீரபத்ர சுவாமிக்கு தங்க மீசை போன்றவற்றையும் அவர் காணிக்கையாக வழங்கி தனது நேர்த்தி கடனை நிறைவேற்றினார்.

இந்நிலையில், விஜயவாடாவில் உள்ள பிரசித்தி பெற்ற கனக துர்க்கை அம்மன் கோயிலுக்கு, தமது குடும்பத்தினருடன் சந்திரசேகர ராவ் சென்றார். அப்போது, கனக துர்க்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரங்களையும், ரூ.1.37 கோடி மதிப்பிலான வைர மூக்குத்தியையும் அவர் காணிக்கையாக வழங்கி, தனது நேர்த்திக் கடனை செலுத்தினார்.

மொத்தம் 11.290 கிராம் எடை கொண்ட இந்த வைர மூக்குத்தியில் விலை உயர்ந்த 57 வைரக் கற்கள், நீலம், கெம்பு போன்ற விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.