பாண்டிச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு மதுபானங்கள் கடத்தப்பட்ட நிலைமாறி தற்போது தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மதுபானங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக இரு மாநில போலீசாரும் எல்லைகளில் சோதனையிட்டு தமிழகத்தில் இருந்து புதுவைக்கு கடத்தி வரப்படும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

 புதுச்சேரியில் மதுபானக் கடைகளை திறப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மதுக்கடைகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டது. ஊரடங்கின்போது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட கடைகள் தவிர மற்ற மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பைல்கள் தயாரித்து கவர்னர் கிரண்பெடியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கவர்னர் கிரண்பெடி அனுமதி மறுத்து வருகிறார். இதனால் இதுவரை மதுபான கடைகள் திறக்கப்படவில்லை.மீண்டும் முதல்வருக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் வலுத்து வருகின்றது.

கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் இரவு 8 மணி வரை நடந்தது. இதில் புதுவையில் மது பானங்களுக்கு கோவிட் வரியை உயர்த்துவது என்பன உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடந்தது.

அதையடுத்து கவர்னரின் அறிவுறுத்தலின்படி வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்து அதற்கு கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் கிரண்பெடி அதற்கு ஒப்புதல் அளித்த பின்னரே மதுக்கடைகளை திறக்க முடியும்.

இதுகுறித்து மல்லாடி கிருஷ்ணாராவ்ள செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுபானங்களுக்கான கோவிட் வரியை புதுச்சேரி, காரைக்காலில் 100 சதவீதமும், மாகிக்கு 150 சதவீதமும், ஏனாமில் 200 சதவீதமும் விதிக்க வேண்டுமென்று கவர்னர் கிரண்பெடி கூறி வருகிறார். புதுவை மாநிலம் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ளது. பெரும்பாலானோர் புதுவைக்கு வந்து மது அருந்துகின்றனர். வரியை உயர்த்தும்போது சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் மாநிலத்திற்கு சுற்றுலா மூலம் வரும் வருமானம் பாதிக்கப்படும்’ என்றார்.

அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறும்போது ‘புதுவை மாநிலத்தில் கோவிட் வரியை அதிகம் விதிக்க வேண்டுமென்று கவர்னர் கிரண்பெடி கூறி உள்ளார். அவர் கூறியதன் அடிப்படையில் உயர்த்த முடியாது. அமைச்சரவையில் முடிவு செய்து ஏற்கனவே விதிக்கப்பட்ட வரியை விட கூடுதலாக வரியை உயர்த்தி அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கோப்புகள் தயார் செய்யப்பட்டு கவர்னர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.