trolls against rajini roll over social media

அரசியலில் இறங்கி முதல்வர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்பது, தமிழக சினிமாவில் பல ஹீரோக்களின் கனவாக உள்ளது. ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்ததால், அவருக்கு கொஞ்சம் அதிகாக உள்ளது.

அதனால், 1996 சட்டமன்ற தேர்தலில் ரஜினி குரல் கொடுத்ததால்தான், திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்று பலரும் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

அந்த தேர்தலில், ரஜினி குரல் கொடுத்ததும் உண்மைதான். திமுக கூட்டணி வெற்றி பெற்றதும் உண்மைதான். ஆனால், ரஜினி குரல் கொடுத்ததால்தான் வெற்றி பெற்றதா? என்பதுதான் கேள்வி.

அப்போதைய அதிமுக ஆட்சியில் நடந்த நிகழ்வுகள், வளர்ப்பு மகன் திருமணம் போன்றவை, அதிமுக மீது மக்களுக்கு, வரலாறு காணாத அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

அதே நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பிரதமர் நரசிம்மராவின் கட்-அவுட்டுக்கே, சத்தியமூர்த்தி பவனில் என்ன மரியாதை நடந்தது? என்று அனைவருக்கும் தெரியும்.

பாமர மக்கள் தொடங்கி, படித்த மக்கள் வரை அனைத்து தரப்பு மக்களும், அதிமுக மீது கடும் கோபத்தில் இருந்தனர். விளைவு, தூத்துகுடியில், மூப்பனார் பங்கேற்ற கூட்டத்தில் கூட லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

அந்த சமயத்தில், தமாகா வுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றாலும், திமுகவே வெற்றி அடைந்திருக்கும் என்பதே உண்மை. அந்த நேரம், ரஜினியும் அதிமுகவுக்கு எதிராக குரல் கொடுத்தார் அவ்வளவுதான்.

அடுத்து 1998 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜக, அதிமுக, பாமக, மதிமுக என, திமுக-தமாகா வுக்கு எதிராக களம் இறங்கின. கோவையில் குண்டு வெடிப்பும் நடைபெற்றது.

அப்போதும், திமுக-தமாகா கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் ரஜினி. அவருடைய பேட்டி, தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடை விடாமல் ஒளிபரப்பப்பட்டது.

ஆனாலும், அந்த தேர்தலில், 30 இடங்களில் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. திமுக-தமாகா கூட்டணி வெறும் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

அப்போதே, ரஜினியின் குரல், தமிழக அரசியலில் எடுபடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.

அதன் பிறகு, ரஜினியை, பாமக சற்று அதிகமாகவே சீண்டியது. 2002 ம் ஆண்டு வெளியான அவரது பாபா படத்தை திரையிட விடாமல் பாமக தடுத்தது. அந்த படமும் தோல்வியை தழுவியது.

அந்த கோபத்தில், 2004 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாமக போட்டியிடும் தொகுதிகளில், அக்கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று, தமது ரசிகர்களுக்கு உத்தரவிட்டார் ரஜினி.

அந்த தேர்தலில், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற பாமக, போட்டியிட்ட ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

அதனால், ரஜினியின் குரல், தமிழக அரசியலில் ஒருபோதும் எடுபட்டதே இல்லை. 1996 சட்டமன்ற தேர்தலில், அவர் குரல் கொடுக்கவில்லை என்றாலும் திமுக கூட்டணிதான் வெற்றிபெற்றிருக்கும் என்று, பல்வேறு பதிவுகளை, வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.