சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து கேரளாவில் உள்ள பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரி அரசு உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. 


இதையடுத்து, அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற இளம் பெண்களை, பக்தர்கள் தடுத்து, திருப்பி அனுப்பினர். 

ஆனாலும் , பிந்து, கனகதுர்கா,  என்ற இரு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலுக்குள் சென்று, தரிசனம் செய்தனர். இது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உட்பட, 65 மனுக்கள் மீது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. 

இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நேற்று, விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என, நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் மாற்றம் செய்யத் தேவையில்லை' என, வாதிட்டார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில், உச்சநீதிமன்றத்தில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர், ராகேஷ் திவிவேதி அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்று செயல்படுவோம் என்றார்.


இயற்கையாக ஏற்படும் மாதவிலக்கு உள்ளிட்ட காரணங்களை கூறி, மனித சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு எதிராக பாகுபாடு பார்க்கக் கூடாது. அரசியல் சட்டம், தங்களுக்கு பிடித்த மதத்தை பின்தொடர, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது. அரசியல் சாசனத்தின் முக்கிய சாராம்சம், சமத்துவமே என்றும் அவர் கூறினார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது  என இதுவரை திட்டவட்டமாக கூறி வந்த, தேவஸ்வம் போர்டு, நேற்று, தன் நிலையை முற்றிலும் மாற்றி அந்தர் பல்டி அடித்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.