Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவின் இரட்டைத் தலைமையின் இரட்டை வேடம்... வெளிச்சம்போட்டு காட்டிய மு.க.ஸ்டாலின்..!

முத்தலாக் திருத்த மசோதாவுக்கு மனப்பூர்வமாக ஆதரவு அளித்து - பா.ஜ.க.வின் மறுபதிப்பாகவே மாறியிருக்கிறது அ.தி.மு.க என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

triple talaq bill... mk stalin statement
Author
Tamil Nadu, First Published Jul 26, 2019, 2:20 PM IST

முத்தலாக் திருத்த மசோதாவுக்கு மனப்பூர்வமாக ஆதரவு அளித்து - பா.ஜ.க.வின் மறுபதிப்பாகவே மாறியிருக்கிறது அ.தி.மு.க என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மெஜாரிட்டி, மைனாரிட்டி என்பது இப்போது கேள்வியல்ல என்று, செயற்கையாக நியாயப் படுத்துவதற்காகப் பேசி, முத்தலாக் மசோதாவிற்கு மக்களவையில் அதிமுக ஆதரவு அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது அதிமுகவிற்குள் இருக்கும் இரட்டைத் தலைமையின் இரட்டை வேடத்தை- பகல் வேடத்தை பளிச்சென வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சிறுபான்மையின மக்களின் நலனை அதிமுக ஒரு போதும் விட்டுக் கொடுக்காது என்று, உள்ளத்தில் கபட எண்ணத்தை மறைத்து வைத்துக்கொண்டு, உதட்டளவில் பேசிக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் திரைமறைவில் பா.ஜ.க.வுடன் இரண்டறக் கலந்து விட்டார்கள் என்பதை முத்தலாக் மசோதாவிற்கு தெரிவித்துள்ள ஆதரவு வெளிப்படுத்தியிருக்கிறது.

 triple talaq bill... mk stalin statement

கடந்த முறை இதே முத்தலாக் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது இது பா.ஜ.க.வின் கம்யூனல் அஜெண்டா என்று கடுமையாக தாக்கிப் பேசினார் அதிமுகவின் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, முத்தலாக் சொல்வோருக்கு மூன்று வருட சிறை தண்டனை ரத்து, விவகாரத்து செய்யப்படும் இஸ்லாமிய பெண்ணுக்கு ஒன் டைம் செட்டில்மென்ட், குழந்தைகளுக்கு வாழ்வாதார நிதி உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி, இந்த மசோதாவிற்கு தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம் என்றார்.

 triple talaq bill... mk stalin statement

ஆனால், இன்றைக்கு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தன் பதவியைக் காப்பாற்றித் தக்க வைத்துக் கொள்ள பழனிச்சாமியும், தனது மகனுக்கு எப்படியாவது மத்திய அமைச்சர் பதவி பெற்றுவிட வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வமும் கூட்டணி சேர்ந்து விட்டார்கள். அதிமுகவையும்- அதிமுக அரசையும் பா.ஜ.க.விடம் ஒட்டுமொத்த குத்தகைக்கு நிரந்தரமாக விட்டுள்ளார்கள். ஆகவேதான் இப்போது முத்தலாக் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது அந்த மசோதாவை ஆதரித்திருக்கிறார் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர். மத்திய அமைச்சர் பதவியில் எப்படியாவது ஒட்டிக் கொண்டுவிட வேண்டும் என்ற துடிப்பு - அதிமுகவின் பா.ஜ.க. ஆதரவில் அப்பட்டமாக மட்டுமல்ல - அசிங்கமாகவே தெரிகிறது. 

triple talaq bill... mk stalin statement

முத்தலாக் மசோதாவில் மட்டுமல்ல - மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவிற்கு முதலில் தமிழக அரசின் சார்பில் டஜன் கணக்கில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அந்த மசோதாவிற்கும் நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்துள்ளது அதிமுக. இப்போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் பெறும் சட்ட திருத்த மசோதாவிற்கும் மனப்பூர்வமாக ஆதரவு அளித்து - பா.ஜ.க.வின் மறு பதிப்பாகவே அதிமுக மாறியிருக்கிறது. சிறுபான்மையின மக்களின் நலன், மாநிலத்தின் நலன், மாநிலத்தின் உரிமைகள் எல்லாம் அதிமுகவின் பதவி தேடும் பேராசைக் கண்களுக்குத்துளி கூடத் தெரியவில்லை.

ஆகவே தனியாக அதிமுக என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றுவதை இனியாவது நிறுத்திக் கொண்டு- பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டு விடலாம். பா.ஜ.க.- ஆர்எஸ்எஸ் கொள்கையே எங்கள் கொள்கை என்று செயல்படுவதற்கு மறைந்த மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய அதிமுக என்ற பெயர் தேவையில்லை. triple talaq bill... mk stalin statement

ஆகவே இரட்டைத் தலைமையாக இருந்து கொண்டு - தமிழகத்தில் ஒரு நாக்காகவும், நாடாளுமன்றத்தில் இன்னொரு நாக்காகவும் செயல்பட்டு, தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமியையும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில், இந்த இரட்டையரின் கபட வேடங்களைப் பார்க்கும் எவருக்கும், இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று, மலைக்கள்ளன் திரைப்படத்தில் எம்ஜிஆர் பாடிய பாடல் நிச்சயம் நினைவுக்கு வரும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios