ஜெயலலிதா இருந்தபோது மெய்யாலுமே அ.தி.மு.க.வில் ராணுவ கட்டுப்பாடு இருந்தது. தனது கட்சியின் நிர்வாகிகள் மீது எந்த புகார் வந்தாலும் கூட சகித்துக் கொள்வார். ஆனால் பெண்ணை ஏமாற்றினார், பெண்ணை  டீஸ் பண்ணினார்! எனும் புகார்கள் வந்தால், அடுத்த நொடியே விசாரணை! புகாரில் உண்மை தெரிந்தால் அடுத்த நொடியே பதவி நீக்கம். இதுதான் ஜெ., ஸ்டைல். 

பெண் விவகாரத்தில் சிக்கி அ.தி.மு.க.வின் மிக முக்கிய பதவிகளை இழந்த வி.ஐ.பி.க்கள் எக்கச்சக்கம். லிஸ்ட் போட்டால் பத்திக்கும் தமிழகம். 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் எக்கச்சக்க புகார்களில் சிக்குவது அ.தி.மு.க. நிர்வாகிகளின் வழக்கமாகிவிட்டது. இந்த ஒரு மேட்டரில்தான் தலை உருளாமல் இருந்தது. இப்போது அக்குறையும் தீர்ந்து, லேடி விவகாரத்தில் அ.தி.மு.க. புள்ளி ஒருவர் சிக்கிட, அசிங்கப்பட்டுவிட்டது திருச்சி ஆளுங்கட்சி. அதாவது திருச்சியில் மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க.  பொருளாளராக இருந்தவர் சோமசுந்தரம். 

ஏற்கனவே திருமணமாகி பின் மனைவியை பிரிந்து வாழும் நபர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் கல்லூரியின் பேராசிரியையை காதலித்திருக்கிறார். ஆனால் அந்தப் பெண்ணும், அவரது குடும்பமும் மறுத்துவிட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருச்சி சிட்டியின் வடக்கு ஆண்டால் வீதியில் வைத்து, பட்டப்பகலில் ஆம்புலன்ஸில் அந்தப் பெண்ணை கடத்திவிட்டாராம். உடன் வந்த பேராசிரியையை எட்டி உதைத்துவிட்டு இந்த கடத்தல் நடந்திருக்கிறது. 

ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட பெண் கதறிக் கொட்ட, தோழி விஷயத்தை பெற்றோரிடம் சொல்ல, போலீஸுக்கு புகார் போயிருக்கிறது. இதனால் துவரங்குறிச்சி பகுதியில் இறக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம் சோமு. சோமசுந்தரத்தின் மீது ஆள் கடத்தல் மற்றும் கட்டாய திருமணத்துக்கு முயன்றது ஆகிய வழக்குகள் பதிவாக, அது கழக தலைமைக்கு தெரியவர உடனே அவரை கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்தே தூக்கிவிட்டனர். திருச்சி அ.தி.மு.க.வில் இப்படி பெண் விவகாரத்தால் அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் பதவியை இழப்பது ஒன்றும் புதிதில்லையாம். 

ஏற்கனவே டாக்டர் ராணி எனும் பெண்ணை ஏமாற்றியதான புகாரில் அமைச்சர் பதவியை இழந்தார் பரஞ்சோதி! மாஜி அமைச்சர் மரியம்பிச்சையின் மகனும், முன்னாள் துணைமேயருமான ஆசிக் மீரா, துர்கா எனும் பெண்ணை ஏமாற்றிய சம்பவத்தால் கட்சியில் கட்டங்கட்டப்பட்டார். அந்த லிஸ்டில் இப்போது சோமசுந்தரமும் இணைந்திருக்கிறார்! என்கின்றனர். ஆனால் இன்னொரு தரப்போ “சோமசுந்ததரத்துக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது. இதனால்தான் தன் மனைவியை அவர் பிரிந்தார். ஆனால் இப்போது இந்தப் பெண் அவரோடு ஏனோ முரண்டு பிடிக்கிறது. அதுதான் விவகாரமே.” என்கிறார்கள். ஓஹோ!