Asianet News TamilAsianet News Tamil

அறிவாலய வரலாற்றில் முதன்முறையாக நெடுஞ்செழியனுக்கு மரியாதை.. அதிமுகவுக்கு செக்..!

இழந்த உரிமைகளை போராட்டங்களினால் மீட்டெடுத்த திராவிட இயக்கத்தில் தனி முத்திரை பதித்தவர் 'நடமாடும் பல்கலைக்கழகம்' நாவலர் நெடுஞ்செழியனுக்கு முதல் முறையாக அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 
 

Tribute to navalar Nedunchezhiyan for the first time in anna arivalayam
Author
Tamil Nadu, First Published Jul 11, 2020, 12:43 PM IST

இழந்த உரிமைகளை போராட்டங்களினால் மீட்டெடுத்த திராவிட இயக்கத்தில் தனி முத்திரை பதித்தவர் 'நடமாடும் பல்கலைக்கழகம்' நாவலர் நெடுஞ்செழியனுக்கு முதல் முறையாக அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுததினார். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- வரலாற்றில் இழந்த உரிமைகளை, வாழ்நாள் போராட்டங்களின் வழியாக மீட்டெடுத்து புதிய வரலாறு படைத்த திராவிட இயக்கத்தில் தனி முத்திரை பதித்தவர் 'நடமாடும் பல்கலைக்கழகம்' எனப் போற்றப்பட்ட நாவலர் அவர்கள். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நம் தி.மு.கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு வழங்கிய அரிய படைக்கலன்களில் ஒருவராக நாவலர் திகழ்ந்தார். இனமானப் பேராசிரியர் அவர்களும், கே.ஏ.மதியழகன் அவர்களும் அதே பல்கலைக்கழகம் வழங்கிய படைக்கலன்கள்.

Tribute to navalar Nedunchezhiyan for the first time in anna arivalayam

தமிழகத்தில் அன்றிருந்த பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் மாணவர்களைப் பேதம் பிரித்துப் பார்க்கும் வருணாசிரமப் போக்கு மிகுந்திருந்த காலம். அதன் பிரதிபலிப்பாக, குடந்தை அரசுக் கல்லூரியில் உயர்சாதி மாணவர்களுக்குத் தனியாகத் தண்ணீர்ப் பானையும், மற்ற சமுதாயத்து மாணவர்களுக்குத் தனிப்பானையும் வைக்கப்பட்டிருந்தது. தாகம் கொண்டு மாணவர் ஒருவர், பேதம் அறியாமல் உயர் சாதி மாணவர்களுக்கான பானையில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டார் என்பதால் அது ‘பெரும் குற்றமாக’க் கருதப்பட்டு, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வருணாசிரம வன்கொடுமையினை எதிர்த்து, அந்தக் கல்லூரியில் பயின்ற தவமணிராசன், கருணானந்தம்  உள்ளிட்ட மாணவர்கள் போராடினர். சிதம்பரத்தில் திராவிட இயக்கப் பிரச்சார நாடகம் நடத்திய பேரறிஞர் அண்ணாவைச் சந்தித்தனர். அதன் விளைவாக, 1-12-1943 அன்று கும்பகோணத்தில் திராவிட மாணவர் கழகத்தைத் தொடங்கி வைத்தார் அண்ணா.

திராவிடர் கழகம் தொடங்கப்படுவதற்கு முன்பே திராவிட மாணவர் கழகம் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் அது கிளை பரப்பியது. 1944-ம் ஆண்டு அதன் மாநில மாநாடு கும்பகோணத்தில் நடந்தபோது, அதில் பங்கேற்று எழுச்சியும் உணர்ச்சியும் மிகு உரையாற்றியவர் நாவலர் அவர்கள். அவருடன் இனமானப் பேராசிரியர், கே.ஏ.மதியழகன், இரா.செழியன், மா.நன்னன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று உரையாற்றினர். அதே காலகட்டத்தில்தான், பள்ளி மாணவராகக் கையில் தமிழ்க்கொடி ஏந்தி இந்திக்கு எதிராக முழங்கி வந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். அதன் ஆண்டுவிழாவில், கலைஞரின் அன்பான அழைப்பின் பேரில் பங்கேற்று உரையாற்றிச் சிறப்பித்தவர் நாவலர்.

Tribute to navalar Nedunchezhiyan for the first time in anna arivalayam

மாணவப் பருவத்திலிருந்தே இருவரும் திராவிடக் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்டனர். அதன்பின், திராவிட இயக்கத்தின் அரசியல் களத்தை அவர்களும் அவர்களைப் போன்றோரும் பேரறிஞர் அண்ணாவின் தலைமையின் கீழ் வடிவமைத்தனர். 1949-ல் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிமை மிகுந்த தூண்களில் ஒருவராக விளங்கியவர் நாவலர். 1955-ல் அண்ணாவின் அன்புக்கட்டளைக்கேற்ப, 'சொல்லின் செல்வர்' ஈ.வெ.கி.சம்பத் அவர்கள் முன்மொழிய, தலைவர் கலைஞர் உள்ளிட்டோர் வழிமொழிய, கழகத்தின் பொதுச்செயலாளராக ஒருமனதாக நாவலர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956-ல் திருச்சியில் நடந்த கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்குத் தலைமை வகித்த நாவலரை, “தம்பி வா.. தலைமையேற்க வா.. உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம்” என்று அண்ணா அவர்கள் அழைத்தது, கழக வரலாற்றிலும் நாவலர் அவர்களின் வாழ்க்கையிலும் புதிய பொன்னான அத்தியாயமானது.

மும்முனைப் போராட்டம் தொடங்கி கழகம் நடத்திய போராட்டங்களில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பக்கபலமாக இருந்த நாவலர் அவர்கள், 1962-ல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். எதிர்க்கட்சித் துணைத் தலைவராகக் கலைஞர் செயலாற்றினார். 1967 தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான  வெற்றி பெற்று, முதன்முதலாக ஆட்சி அமைத்தபோது, பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவையில் நாவலர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். தலைவர் கலைஞர் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத்துறைகளுக்கு அமைச்சரானார்.

Tribute to navalar Nedunchezhiyan for the first time in anna arivalayam

காலம் கருணையின்றி பேரறிஞர் அண்ணா அவர்களை 1969-ல் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டபோது, கழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் நிலவியது. கட்சிக்கும் ஆட்சிக்கும் தனிச் சிறப்பான தலைமை தேவைப்பட்டது. கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலைஞரை முன்னிறுத்தினர். இடைக்கால முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த நாவலர் அவர்கள் மனவருத்தம் கொண்டிருந்த அந்தச் சூழலில், கழகத்தைக் கட்டிக்காக்க வேண்டும் என்ற உணர்வுடன் தலைவர் கலைஞர் அவர்களும் மற்றவர்களும் மேற்கொண்ட முயற்சிகள், நாவலரின் எண்ண அலைகள் அனைத்தும் நெஞ்சுக்கு நீதியில் தலைவர் கலைஞர் அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, கழகத்தின் தலைவராகக் கலைஞர், பொதுச் செயலாளராக நாவலர், பொருளாளராக 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு, கழகம் எனும் பேரியக்கம் தொடர்ந்து பெரும் வளர்ச்சி காண்பதற்கு வழிவகுக்கப்பட்டது. பின்னர், தலைவர் கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்ற நாவலர் அவர்கள், இந்தியாவின் முன்னோடித் திட்டங்கள் பலவற்றைத் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சி நிறைவேற்றியபோது, அதற்குத் துணை நின்றவர்.

நெருக்கடி நிலை காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் நிலைமைகளால், நாவலர் அவர்கள் தனி இயக்கம் கண்டு, பின்னர் மாற்று முகாமில் இணைந்தபோதும், திராவிட இயக்கக் கொள்கைகளைக் கைவிடாமல் காப்பாற்றியவர். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளையும், பேரறிஞர் அண்ணாவின் தமிழ் உணர்வையும் தன் மேடைப் பேச்சுகளில் உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தவர்.

Tribute to navalar Nedunchezhiyan for the first time in anna arivalayam

"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்"

- எனும் குறளுக்கேற்ப, கேட்பவர்களை ஈர்க்கும் வகையிலும் - தன் பேச்சைக் கேட்காதவரும் எப்போது கேட்போம் என எதிர்பார்க்கும் வகையிலும், இளைஞராக இருந்தபோது ‘இளந்தாடி’ நாவலராக மேடைகள் தோறும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகளை எடுத்துரைத்து, கொள்கை முழக்கம் செய்தவர், தன் முதுமை வரையிலும் தனக்கென உருவாக்கிக் கொண்ட தனி பாணியுடன் திராவிடக் கொள்கைகளை முழங்கியவர். மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு, வைக்கத்தில் நடைபெற்ற பெரியார் சிலை மற்றும் அருங்காட்சியகம் திறப்புவிழா, புத்தாயிரம் ஆண்டில் பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய இறுதிப் பேருரை என அனைத்திலும் பெரியாரின் மாணவராக - அண்ணாவின் தம்பியாக அவர் முழங்கியது எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

அம்மையார் ஜெயலலிதாவும் அவரது அமைச்சர்களும் பதவியேற்றபோது, திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு மாறாக மற்றவர்கள் உறுதிமொழி ஏற்ற நிலையில், பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் - தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து பின்பற்றிவந்த  முறையில் - ‘உளச்சான்றின்படி உறுதிகூறி’ பதவியேற்றுக் கொண்டவர் நாவலர். தடம் மாறாத இத்தகைய கொள்கைப் பற்றினால், எந்நாளும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் அளப்பரிய அன்புக்குரியவராக அவர் திகழ்ந்தார்! மாற்றுக்கட்சியில் அவர் இருந்தபோதும் ‘நாவலர்’ என்றே அவரை அன்புடன் அழைப்பார் நம் தலைவர்.

Tribute to navalar Nedunchezhiyan for the first time in anna arivalayam

2000-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் நாவலர் அவர்கள் இயற்கை எய்தியதை அறிந்து வேதனையுற்ற கழகத் தலைவரும் அன்றைய தமிழக முதல்வருமான கலைஞர் அவர்கள் நேரடியாகச் சென்று, தன் கொள்கைச் சகோதரருக்கு  இறுதி வணக்கம் செலுத்தினார். தலைவர் கலைஞர் வளர்த்துக் காத்த அரசியல் நாகரிகமும், திராவிட இயக்க வரலாற்றில் தனக்கெனத் தகுதிமிக்கதோர்  இடமும் கொண்ட நாவலர் அவர்களின் நூற்றாண்டு விழாவினைத் திராவிட முன்னேற்றக் கழகம், வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் என்ற உறவிலும் உரிமையிலும், சிறப்புடன் கொண்டாடி மகிழ்கிறது என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios