சிறந்த ஆங்கில அறிவு, சாதி, மதம் பார்க்காத சீமான், எழுத்தாளர், இலக்கியவாதி என பன்முகம் கொண்ட சிங்கம்பட்டி கடைசி ஜமீன் தமிழ் மண்ணில் இருந்து விடைபெற்றிருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்ணீர் சிந்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..."தமிழகத்தில் கடைசியாக முடி சூட்டப்பட்ட, சிங்கம்பட்டி குறுநில மன்னர், நல்லகுத்தி சிவசுப்பிரமணிய சங்கர முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள், நேற்று இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். 


என் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய பெருந்தகை. பழகுதற்கு இனிய பண்பாளர். இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியின் நேரடிச் சொந்தம். சொரிமுத்து அய்யனார் கோவில் பரம்பரை அறங்காவலர் என்றாலும், சாதி, மத பேதம் இன்றி அனைத்து சமுதாய  மக்களுடனும், அன்புடனும்,பாசத்துடனும் பழகியவர். சிறந்த கல்விமான். இலங்கை கண்டியில் ஆங்கிலேயர்கள் கான்வென்டில் படித்தவர் என்பதால், தங்கு தடை இன்றி ஆங்கிலத்தில் உரையாற்றக் கூடியவர். பல நூல்களை எழுதி இருக்கின்றார். சங்கத் தமிழ்ப் பாடல்களை எல்லாம் மனனம் செய்தவர். பொருள் விளக்கமும் தருகின்ற ஆற்றலாளர். 

சிங்கம்பட்டி அரண்மனைக்குச் சென்று பலமுறை அவரைச் சந்தித்து இருக்கின்றேன். 
என் செயலாளர் அருணகிரி எழுதிய சங்கரன்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மூதூரின் வரலாறு என்ற நூலை, 2015 ஆம் ஆண்டு நான் வெளியிட பெருந்தகை முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அப்போது அவருடன் நீண்ட நேரம் உரையாடினேன். என் மீது பற்றும் பாசமும் கொண்டவர். அவரது மறைவு ஒரு பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஜமீன் குடிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.