நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் மீது ஏற்கனவே அரசுக்கு எதிராக பேசியதாக பல்வேறு வழக்குகள் காவல் துறையில் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேசியதற்காக சீமான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அண்மையில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. கொரோனா பரவுதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து அப்போராட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே கோவை ஆத்துப்பாலம் அருகே பிப்ரவரி 22 ஆம் தேதி இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்குபெற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்த்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசினார்.

இது தொடர்பாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சீமான் மீது தற்போது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேசத்துரோகம், உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் சீமான் மீது வழக்கு பதியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.