ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அ.தி.மு.க.வில் எல்லா வி.ஐ.பி.க்களுக்கும் வாய் முளைத்துவிட்டது. அதில் விஜயபாஸ்கர் மட்டும் விதிவிலக்கா என்ன?  போக்குவரத்து துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சமீபத்தில் தனது இல்ல விழாக்கள் இரண்டை, இரண்டு முதல்வர்களையும் அழைத்து பெரும் விமரிசையாக கொண்டாடினார். 

இந்த நிகழ்வுகளுக்காக அரசு பேருந்துகள் விதிகளை மீறி பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அடக்கி வாசிக்கப்பட்டது அந்த முயற்சி. தான் அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணுவதாக அப்போது கிளப்பிவிட்டதே மாஜி மாண்புமிகு செந்தில்பாலாஜிதான் என்று லேசாக கொந்தளித்தார் பாஸ். இப்போது விரிவாக கடுப்பாகியிருப்பவர், ”சொந்த கட்சிக்கே துரோகம் செய்யும் புத்தி கொண்டவர் செந்தில் பாலாஜி. தன்னைத் தவிர இந்த கரூர் மாவட்டத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது, இந்த மாவட்ட அ.தி.மு.க.வில் யாரும் வளரவும் கூடாது என்று நினைத்தவர்.

 

நான் அமைச்சரானதையும், மாவட்ட செயலாளர் ஆனதையும் அவரால் தாங்கிக்க முடியவில்லை. எனது இரண்டு பதவிகளையும் பறிக்க எவ்வளவோ முயன்றார். ஆனால் எதையும் அசைக்கமுடியவில்லை. அம்மாவின் ஆசீர்வாதம் எனக்கு அப்படி. அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வந்ததில்லையா, அப்போது என்னை சொல்லி வைத்து அசிங்கப்படுத்தினார். பொதுவாக மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் பணி செய்ய சொல்லி பூத் ஒதுக்க மாட்டார்கள். 

ஆனால் அப்போது தேர்தல் பொறுப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்து எனக்கு பூத் ஒதுக்க செய்தார். இது என்னை அசிங்கப்படுத்திட செய்த செயலேதான். ஆனாலும் நான் கலங்கவில்லை.  ரங்கமலை அடிவாரத்தில் ஒதுக்கப்பட்ட பூத்தில் திறமையாய்  உழைத்து அவரது வெற்றிக்கு தோள் கொடுத்தோம். ஆனால் வென்ற பின் ஒரு வார்த்தை நன்றி கூட சொல்லவில்லை. இவ்வளவு மோசமாக நடந்து கொண்டதால்தான் எம்.எல்.ஏ. பதவி உள்ளிட்ட எல்லாத்தையும் இழந்து இதோ அம்போவாக நிற்கிறார்.” என்று பாய்ந்திருக்கிறார். இதுக்கு செந்திலின் ரியாக்‌ஷன் எப்படி இருக்குமோ? என்பதுதான் ஹைலைட்டே.