கடந்த 68 நாட்களாக கொரோனா வைரஸ்  நோய்  தடுப்பை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த பொது ஊரடங்கு காரணமாக இயக்கப்படாமல் இருந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை தற்போது இயக்கிட தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் வகுத்துள்ளது. இந்நிலையில் அது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்த அவர், பொதுமக்களின் நலன் கருதி தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் 6 மண்டலங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறினார்.  சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து  கழகப் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற அவர்,  இவை தவிர மற்ற 6 போக்குவரத்து கழகங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்படும் என தெரிவித்தார். அதாவது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என அவர் கூறியுள்ளார். தற்போது பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

அது ஒரு வார காலம் கழித்து இயக்கப் படலாம் என கூறினார். அதே போல் தற்போது உள்ள சூழ்நிலையில் பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என கூறினார். பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு செல்வதற்கு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,  மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் கலந்து ஆலோசித்துள்ளோம் , முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பெயரில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும்,  இது தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் அவர்கள் பள்ளிக் கல்வித்துறை செயலாளருடன் கலந்தாலோசித்துள்ளார். ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன, இதே நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் எனக் கூறினார். பயணிகளின்  எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா.?  என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக உள்ளது என்றும் தேவைக்கேற்ப பேருந்துகள் படிப்படியாக கூடுதலாக இயக்கப்படும் என்றார், அதே போல் பேருந்துகள் ஆறு மண்டலங்களில் காலை 6மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்றார். 

போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  பணியாளர்கள் யாருக்கும் ஊதியம் பிடித்தம் செய்யப்படவில்லை,  ஒரு வருடத்திற்கான சராசரியை கணக்கில்கொண்டு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக பணிக்கு வராமல் இருப்பவர்களுக்கு சம்பளமும், பணிக்கு வருபவர்களுக்கு சம்பளம் இல்லாமல் இருக்கும் நிலையை தவிர்க்க இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை மீதி இருக்கும் நாட்கள்  அவர்களுக்கு விடுப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றார், ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்வது குறித்து கேட்டதற்கு,  68 நாட்கள் பேருந்துகள் இயங்காத நிலையில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கே இ-பாஸ் தேவைப்பட்டது, தற்போது ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மண்டலத்திற்கு உள்ளாக மட்டுமே செல்ல முடியும். அடுத்த மண்டலத்திற்கு கட்டாயம் இ- பாஸ் பெற்றுதான் செல்ல வேண்டும் என்றார்.