பலருக்கு டாக்டர் படிப்பு கனவு அந்த கனவு நிறைவேறாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் தமிழகத்தில் ஏராளாம்.நிலமை இப்படி இருக்க டாக்டருக்கு படித்துவிட்டு திருங்கை ஒருவர் மதுரை மீனாட்சி பட்டினத்தில் கூடல்மாநகரில் பிச்சைஎடுத்துக்கொண்டிருந்தவரை போலீசார் விசாரணை என்கிற பெயரில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மதுரை மாநகரில் உள்ள திலகர் திடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே சுற்றித்திரிந்த திருநங்கையை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தான் ஒரு எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர் என்று சொல்லியிருக்கிறார். இதனை நம்பாத போலீசார் திருநங்கையை காவல் ஆய்வாளர் கவிதா முன்பு கொண்டு போய் ஆஜர்படுத்தியுள்ளனர்.

அப்போது நீ டாக்டருக்கு படித்திருக்கிறாய் என்பதை எப்படி நம்புவது? என்று கேட்டிருக்கிறார் ஆய்வாளர், உடனே தனக்கு தெரிந்த திருநங்கை நண்பரிடம் சொல்லி, தான் படித்து வாங்கிய படிப்பு சான்றிதழ்களை எல்லாம் கொண்டு வரச்சொல்லியுள்ளார். அதனை வாங்கிப்பார்த்த ஆய்வாளர் ஒரு நிமிடம் ஆடிப்போனாராம்.

இவ்வளவு படிப்பு படித்துவிட்டு ஏன் சாலையில் பிச்சை எடுக்கிறாய்? என்று கேட்டதும், ‘’நான் திருநங்கைதான் என்று சான்றிதழ் வாங்குவதற்கு ரொம்ப சிரமமாக இருக்குது. சமுதாயத்திலும் எனக்கு நிரந்தரமான அங்கீகாரம் இல்லை. இதனால் வேறு வழியில்லாம இப்படி சாலையில் அலைஞ்சு பிச்சை எடுத்து வந்தேன்’’ என்று அழுதுள்ளார்.

திருநங்கையின் கண்ணீர் கதையை கேட்டு உருகிய ஆய்வாளர் கவிதா, உயரதிகாரிகளிடம் இது பற்றி தகவல் தெரிவித்துள்ளார். உயரதிகாரிகளின் உதவியுடன் கிளினிக் அமைத்துக்கொடுத்து, தனது சொந்த செலவில் மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்திருக்கிறார் பெண் ஆய்வாளர்.