இயக்குநரும் நடிகருமான  டி.ராஜேந்தர், இலட்சிய திமுக என்ற பெயரில் கட்சி தொடங்கி செயல்பட்டு வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அலுவலகத்தில் விழா ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 28 ஆம் தேதி அரசியல் வாழ்வின் முக்கிய முடிவை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் அவர் சந்தித்தார். அப்போது, தனது கட்சியின் புதிய போர்டு ஒன்றை திறந்து வைத்தார். அந்த போர்டில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. அதில் வழக்கமாக இருக்கும் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்பதற்கு பதிலாக இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்று இருந்தது. 

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய டி.ஆர்., இவர்கள் நான்கு பேரின் ஆன்மாதான் என்னை வழிநடத்த வேண்டும். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். தூக்கி எறியப்பட்டார். ஒரு விதத்தில் பார்த்தால் எனக்கும் இன்று அதேநிலைமைதான். அன்றைக்கு அவருக்கு ஏற்பட்ட வலி இன்றைக்கு என்னால் உணர முடிகிறது. இனி திமுகவுக்கும் எனக்கும் தொடர்பில்லை. என் வழி தனி வழி என்றார்.

2013 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் மீண்டும் திமுகவில் இணைந்தபோது கருணாநிதி வெளியிட்ட அறிக்கையின் அசல் நகலை இன்றைய நிகழ்வில் வெளியிட்ட டி.ராஜேந்தர், கலைஞர் கருணாநிதியைத் தவிர யாரையும் அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் இன்றைய திமுக, ஸ்டாலினின் திமுகவாக இருக்கிறது என்று கூறினார்.

மேலும் தந்தை பெரியாருக்கும் சரி அறிஞர் அண்ணாவுக்கும் சரி, எம்.ஜி.ஆருக்கும் சரி, ஜெயலலிதாவுக்கும் சரி பெற்றெடுத்த பிள்ளைகள் இல்லை. இவர்கள் நான்கு பேரின் ஆன்மாவுடைய கொள்கைகளுக்கும் இனி நான் தத்து பிள்ளை என்று டி.ராஜேந்தர் கூறினார்.