கொரோனா வைரஸ்  சிகிச்சைக்காக , தங்களுக்கு இதுவரை எந்த வித உத்திரவாதத்தையும் வழங்காமல்,  தமிழக அரசு தங்களில் பயிற்சி காலத்தை நீட்டித்திருப்பதாக பயிற்சி மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வார்டுகளில் பணியில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு தேவையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பாதூகாப்பு அம்சங்களை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-   2014 ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த நாங்கள் ,  அரசு ஒப்பந்தத்தின் படி 2020 மார்ச் 28 ஆம் தேதியுடன்  எங்களுடைய பயிற்சி மருத்துவத்தை முடித்து இருக்கிறோம்.  மேலும் ஒரு மாதம் நாங்கள் covid19 க்கான சிகிச்சை மற்றும் தடுப்பு பணிக்காக ,பணி நீட்டிப்பிற்கு உள்ளாகி இருக்கிறோம். நாட்டின் இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு ,நாங்களும் தொடர்ந்து 2 நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணியில் உள்ளோம். 

CoVID- 19 என்னும் கொள்ளை நோயின் பரவலை தடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு தேவையான, சுய பாதுகாப்பு உபகரணங்களும் (PPEs),முக கவசங்களும் (N95 Masks), ஹேஷ்மேட் ஷூட்ஸ் மற்றும் கை சுத்தம் செய்யும் கிருமிநாசினிகளும் (Sanitizers) தேவையான அளவில் அனைவருக்கும் எவ்வித தட்டுப்பாடும்  இன்றி கிடைக்க வழிவகை செய்யுமாறு தமிழக அரசிடமும்,  கல்லூரி நிர்வாகத்திடமும் கேட்டுக் கொள்கிறோம்.  பயிற்சி மருத்துவர்களுக்கு, பயிற்சி நிறைவு சான்றிதழை எந்தவித காலதாமதமின்றியும்,  எவ்வித எதிர்மறை கருத்துக்கள் இன்றியும் நியமனம் செய்யப்பட்ட பயிற்சி கால அளவு முடிந்த நாள் வரை வழங்கிட வேண்டும்.  

எதிர்கால மேல்நிலை படிப்புக்கான தகுதிகள் மற்றும் மற்ற தனியார் மருத்துவ மாணவர்களுடன் ஒப்பிடுகையில் மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்வதில் எவ்வித பின்னடைவும் ஏற்படாத வகையில் செய்திட வேண்டும். CoVID-19 கொள்ளை நோயினால் மருத்துவமனையில் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போது 2014 ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றியதை பாராட்டும் வகையில், பயிற்சி நிறைவு சான்றிதழில் மேற்கோள் காட்ட வேண்டும் (அல்லது) அதற்கான சிறப்பு சான்றிதழை தனியாக  வழங்குமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.  

இந்த பணிக்கால நீட்டிப்பின் போது தகுந்த ஊதியமும், தமிழக அரசு அறிவித்துள்ள சுகாதார ஊழியர்களுக்கான சிறப்புச் சலுகைகளும் எங்களுக்கும் வழங்கிட வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  இந்த நெருக்கடி நிலையின் போது ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு, உணவிற்காகவும்‌ தங்குவதற்காகவும் எங்கள் ஊதியத்திலிருந்து எவ்வித பிடிப்பும் செய்யக் கூடாது என்று தமிழக அரசிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் கேட்டுக் கொள்கிறோம்.  

6.2014 ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவர்களை, CoVID-19 அவசர மற்றும் நெருக்கடி நிலையின் போது மட்டும் பணியில் அமர்த்துவதை  கல்லூரி நிர்வாகத்திடம் உறுதி செய்ய வேண்டும், எனவும் கேட்டு கொள்கிறோம் . CoVID-19 தொற்று நோய் பரவல் இன்னும் சில மாதங்கள் நீடிக்க வாய்ப்புள்ளதால் அரசு மருத்துவ அலுவலர்களான MRB , NEET-PG 2021 தேர்வை ஒத்தி வைக்குமாறும், அல்லது தனி இடஒதுக்கீடு அல்லது குறிப்பிட்ட சதவீதம் கூடுதல் மதிப்பெண்ணை தர வேண்டும் எனவும் தமிழக அரசிடம் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் வலியுறுத்துகின்றனர்.