சென்னை லஸ் கார்னரில்  போலீஸ் பூத் அருகே அரை நிர்வாணமாக படுத்திருந்த முதியவர் ஒருவருக்கு போக்குவரத்து காவலர் ஒருவர் புது லுங்கி வாங்கிவந்து கட்டிவிட்டது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்துள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகளை ஹெல்மெட் போடாத காரணத்துக்காக போக்குவரத்து போலீஸ் ஒருவர் எட்டி உதைத்ததில் மூன்று மாத கர்ப்பிணியான  உஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் ஏன் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி இருந்தனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் காவல்  துறையிலும் பல மனிதாபிமானம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்  என்பது சென்னையில் இன்று நடந்த ஒரு சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் லஸ்கார்னர் அருகே போலிஸ் பூத் ஒன்றில் வெயிலுக்கு ஒதுங்கிய முதியவர் ஒருவர் மிக கிழிந்த ஆடைகளை அணிந்திருந்தார். கிட்டத்தட்ட அரை நிர்வணமாகவே இருந்தார். பட்டினிக் கொடுமையால் அவரால் நடக்கக்கூட முடியவில்லை.

இதனை கவனித்த அங்கிருந்த போக்குவரத்து காவலர் அந்த முதியவருக்கு புது லுங்கி ஒன்றை வாங்கி அணிவித்தார். பின்னர் அவர் மிகுந்த பசியுடன் இருப்பதைப்பார்த்த போக்குவரத்து காவலர் அந்த முதியவருக்கு உணவு வாங்கிக் கொடுத்து அன்புடன் அனுப்பி வைத்தார். இதனை அங்கிருந்த பொது மக்கள் கவனித்து அந்த காவலரைப் பாராட்டினர்.

இந்த காட்சியை சிக்னலில் நின்று கொண்டிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி முகம் தெரியாத அந்த காவலருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

.திருச்சியில் கருவுற்ற பெண்ணை தாக்கிய அந்த காவலர் செய்த பாவத்துக்கு இது போன்ற மனிதாபிமானமுள்ள காவலர்கள் பிராயசித்தம் செய்து வருவதாகவும் பொது மக்கள் பாராட்டுகின்றனர்.