நாடாளுமன்றத்தில் , மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதா, சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு, விதிக்கப்படும் அபராத தொகை, பல மடங்கு உயர்த்தப்பட்டது. 

இந்நிலையில், கேரளாவில் நடக்கும், முதலமைச்சர்  பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு, போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, பாதியாக குறைத்துள்ளது.

இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமலும், கார்களில், 'சீட் பெல்ட்' அணியாமலும் ஓட்டிச் செல்வோருக்கு, புதிய சட்டப்படி விதிக்கப்பட்டு வந்த அபராத தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது, மொபைல் போனில் பேசினால், விதிக்கப்பட்டுவந்த, 10 ஆயிரம் ரூபாய் அபராதம், 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்களை அதிவேகமாக ஓட்டி சென்று பிடிபட்டால், விதிக்கப்பட்டு வந்த அபராத தொகை, 5,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக ஒட்டிச் செல்லப்படும், கனரக வாகனங்களுக்கான அபராத தொகை, 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச் சென்று பிடிபடுவோருக்கு விதிக்கப்படும், 10 ஆயிரம் ரூபாய் அபராத தொகையிலும், வாகனங்களை ஓட்டிச் செல்லும் சிறுவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையான, 10 ஆயிரம் ரூபாயிலும், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.