tomorrow all schools leave in theni district
ஒபிஎஸ்சின் சொந்த மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு ஆள் சேர்ப்பதற்காக வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி மழையே பெய்யாத தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் தலைமையில் தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
அதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதனால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு பள்ளியில் படிக்கும் சிறுவர்களை அழைத்து செல்லக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து செல்ல தடை விதித்து உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து நாளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சீருடையில் அல்லாமல் நாளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு மாணவர்கள் வரவேண்டும் என அறியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் எடப்பாடி சேலத்தில் பலத்தை காட்டியது போன்று பன்னீர்செல்வம் தேனியில் பலத்தை காட்டவே மழையே வராத மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
