பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நாளை சந்தித்துப் பேச உள்ளார்

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் உள்ள சசிகலாவை அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன் பலமுறை சந்தித்து பேசி இருக்கிறார் மீண்டும் அவர் நாளை சசிகலாவை சந்திக்க உள்ளார்.

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வருகிற 12-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட உள்ளனர். இந்த கூட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வது குறித்தும் சசிகலாவுடன் தினகரன் ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

சசிகலா சிறையில் கொடுக்கும் உணவையே தற்போது உண்டு வருவதாக தெரியவந்துள்ளது இதே போல சிறையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்கிறார். மேலும் அவருக்கு என்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது? எந்த வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது? எந்த பத்திரிகைகள் அவருக்கு படிக்க கொடுக்கப்படுகிறது? என்பது குறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி சிறை சூப்பிரண்டுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கு சிறை நிர்வாகம் பதில் அளித்து இருக்கிறது. சிறையில் அவருக்கு அளிக்கப்படும் வசதிகள் ரத்து செய்யப்படவில்லை என்று மட்டும் கூறி உள்ளது. ஆனால் என்னென்ன வசதிகள் அளிக்கப்படுகிறது என்பதை அந்த பதிலில் தெரிவிக்க வில்லை.எனவே இது குறித்தும் சசிகலாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.