ஈரோடில் நடைபெற்ற திமுக மண்டல மாநாட்டில் தொண்டர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தற்காலிக கழிப்பறைகள் நிரந்தரமாக கிராம மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என அக்கட்சியில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு  மாவட்டம் பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மண்டல மாநாடு நேற்று தொடங்கியது. இன்று மாநாட்டின் 2-வது நாள் பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பேசினார்கள்.

காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர எந்த அமைப்பையும் ஏற்க மாட்டோம் என தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   இதனைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின்  நிறைவுரையாற்றினார்.

முன்னதாக இந்த  மாநாட்டிற்காக திமுக தொண்டர்கள் யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று  ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.  அதற்குப் பதிலாக திமுக கொடியை பல இடங்களிலும் நாட்டி எழுச்சியைத் தூண்டுமாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் மாநாட்டில் பேசிய  ஸ்டாலின் ,  மண்டல மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட கொடிகளையும் கழிப்பறைகளையும் பயனுள்ள விதமாக மாற்றப் போவதாக தெரிவித்தார்.

ஈரோட்டில் பறக்கவிடப்பட்ட கொடிகள் மாநாடு முடிந்த பிறகு மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் நிரந்தமாக பறக்கவிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட தற்காலிகக் கழிப்பறைகள் நிரந்தமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுவிடும். என்றும்  ஸ்டாலின் குறிப்பிட்டார்.

பல விதங்களில் இந்த மாநாடு முழுக்க முழுக்க மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றும் ஸ்டாலின் பெருமிதத்துடன்  தெரிவித்தார்.