இன்று வாய் கிழிய பேசும் தினகரன் ஜெயலலிதா உடல்நலம் பெற என்றாவது பிரார்த்தனை செய்திருப்பாரா எனவும், சசிகலா அவரது வீட்டுக்காரர் உடல்நலம் பெற என்னென்ன செய்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சசிகலா யாரையும் மருத்துவமனையில் அனுமதிக்காமல் காத்து வந்தார். 

ஆனால் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக பேட்டி அளித்து வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் அவர் சிறைக்கு சென்றார். இதைதொடர்ந்து அமைச்சரவை வட்டாரம் எடப்பாடி கைக்கு மாறியது. 

நீண்ட நாட்களாக சிறையில் இருந்த சசிகலா  தற்போது அவரது கணவர் நடராஜன் உடல் நிலை குன்றி உள்ளதால் பரோலில் வெளிவந்துள்ளார். 

நடராஜனுக்கு குளோபல் மருத்துவமனையில் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பட்டினபாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்று வாய் கிழிய பேசும் தினகரன் ஜெயலலிதா உடல்நலம் பெற என்றாவது பிரார்த்தனை செய்திருப்பாரா எனவும், சசிகலா அவரது வீட்டுக்காரர் உடல்நலம் பெற என்னென்ன செய்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். 

ஜெயலலிதாவுக்கு  சசிகலா குடும்பம் இழைத்த துரோகத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும், சசிகலா அவரது வீட்டுக்காரரை பார்க்க வருகிறார். அதற்கு மேளதாளம் என்ன? வரவேற்பு என்ன? எல்லாவற்றையும் மக்கள் பார்க்கத்தான் செய்கிறார்கள் எனவும் சாடியுள்ளார்.