today the first assembly session of this year
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் தற்போது நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது. அவை மரபுப்படி, இன்றைய கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இதற்காக, காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திற்கு வரும் அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.
சட்டப் பேரவைக்குள் ஆளுநருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. சபாநாயகர் இருக்கைக்கு வரும் அவர், சபாநாயகர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் , அமைச்சர்கள், உறுப்பினர் களை பார்த்து வணக்கம் செலுத்துகிறார். அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக் கப்படுகிறது.
அதன்பிறகு, 10 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த தொடங்குகிறார். அவரது உரையில் அரசின் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இடம்பெற்று இருக்கும். கவர்னரின் பேச்சு சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று தெரிகிறது. தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற பின், அவர் சட்டசபையில் முதன் முதலராக உரை நிகழ்த்துகிறார்.

கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததும், அவரது உரையை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். இவை அனைத்தும் மதியம் 12 மணிக்குள் நிறைவடையும் என்று தெரிகிறது. அத்துடன் இன்றைய கூட்டம் முடிவடையும்.
சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்தும் போது தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பக்கூடும் என்று தெரிகிறது.
மதியத்திற்கு பிறகு, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்னென்ன அலுவல்களை எடுத்துக்கொள்வது? என்று முடிவு செய்யப்பட இருக்கிறது. வரும் 12 ஆம் தேதி வரை ஆதாவது 4 நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றையகூட்டத்தில் சுயேட்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் முதன்முதலாக பங்கேற்கிறார். அவர் சட்டப் பேரவையில் தனது கன்னிப் பேசிசை தொடங்குவாரா ? அதற்கு சபாநாயகர் தனபால் வாய்ப்பளிப்பாரா? போன்ற பரபரப்பான சம்பவங்கள் இன்று அரங்கேறவுள்ளது
