முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தனது முதல்வராக அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. முதல்வரின் பிறந்தநாளை கோலாகலமாக தமிழ்நாடு முழுக்க உள்ள திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சமீபத்தில்தான் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அந்த வெற்றியை தொடங்கி முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுக்க இதற்காக பெரிய விழாக்கள், கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பாதையில் முக்கிய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.
*1953ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி கருணாநிதி - தயாளு அம்மாளின் மகனாகப் பிறந்த இவர், இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டவர். தனது 14வது வயதில் 1967ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த ஸ்டாலின் திமுகவுக்காக துண்டுபிரசுரங்கள் மூலம் தனது பரப்புரையை தொடங்கினார்.
*1975ல் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட போது, சிறையில் அடைக்கப்பட்டு போலீசாரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஸ்டாலின், 1984ம் ஆண்டு திமுகவின் மாநில இளைஞரணி செயலாளாராக நியமிக்கப்பட்டார்.
*சிறையில் ஸ்டாலின் இருந்தபோதுதான் அவரது 24வது பிறந்த நாள் மார்ச 1-ம் தேதி இருண்ட பிறந்த நாளாகவே கழிந்தது. ஸ்டாலின் வாழ்வில் மறக்க முடியாத பிறந்த நாளாக அந்த பிறந்த நாள் இருந்தது.
*உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு நேரடி மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு நேரடியாக தேர்வான முதல் மேயர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.
*அவர் மேயராக இருந்த காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தினார். மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டன. அன்றைய காலக்கட்டத்தில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சீட் பெற சிபாரிசு என்ற நிலையாக மாறியது.
*மேலும், சென்னை மாநகராட்சியில் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இந்த பாலங்களால் தான் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதற்கு காரணம். மேலும், இந்த பாலங்கள் தற்போதைய அளவில் தரமானதாகவும், உறுதியானதாகவும் நீடித்து நிற்கிறது.
*மு.க.ஸ்டாலின் கட்டிய இந்த பாலங்களில்தான் ஜெயலலிதா செல்ல மறுத்தார். ஆனால், பின்வரும் நாட்களில் அவரே அந்த பாலத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பாலம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறி ஜெயலலிதா சிபிசிஐடி விசாரணைக்கு கூட உத்தரவிட்டார். ஆனால், அதிமுக ஆட்சி முடியும் வரை பாலங்கள் கட்டியதில் ஒரு ரூபாய் கூட ஊழல் நடந்தது என்பதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.

*அந்த அளவுக்கு மேயராக இருந்த போது அவர் நேர்மையாக இருந்து செயல்பட்டு சென்னை மாநகர மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார். அதனால், தான் சென்னை மக்களுக்கு திமுகவின் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் தான் காரணம் என்று கலைஞரே அவரை அழைத்து பாராட்டினார்.
*ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலை குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் படி ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தார்.
*அனைத்து மகளிரும் சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு பட்டி தொட்டி எங்கும் பரவியது.
*‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை மூலம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 549 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கோரிய உதவிகள், நல உதவிகளை வழங்கினார். முதல்வருக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தனர். புதிய ரேஷன் கார்டுகள் பெற்றுள்ளவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி ரூபாய் இரண்டாயிரம் வழங்கிட உத்தரவிட்டார்.
*தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயம் அடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
*கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் ரூ.5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும் நடவடிக்கை எடுத்தார். அதோடு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் தங்கிட முன்னுரிமை அளித்திடவும் உத்தரவிட்டார். இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் வகையிலும், அதோடு தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடியாக நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
*திருநங்கைகளுக்கு நிவாரண உதவித் தொகை ரூ.2000 வழங்கும் திட்டம், ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூபாய் 2000 வழங்கும் திட்டம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய பை ஆகிய திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் தொடங்கி வைத்தார்.
*இந்தியாவிலேயே முதல் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் பி.பி.இ. கிட் கவச உடை அணிந்து கொரோனா வார்டிற்குள் நேரில் சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களை சந்தித்து நலம் விசாரித்தது இந்தியாவிலேயே இதுவே முதல் முறையாகும். ஒரே முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின்
*கொரோனா தொற்றுக் காலத்தில் பணியாற்றி வரும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு ரூபாய் 5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
*திமுகவில் கருணாநிதிக்குப்பின் நம்பிக்கைமிக்க தலைவரானார் ஸ்டாலின். கருணாநிதி இல்லாத திமுக, கடந்த கடினமான அரசியல் பாதையில் மூத்த தலைவர்களையும், இளையோரையும் ஒருங்கிணைத்து திமுகவை வழி நடத்துவது கடினமான பணி, ஆனால் 52 ஆண்டுகால கட்சி அனுபவம் ஸ்டாலினுக்கு அது எளிதானது. கருணாநிதியின் மறைவுக்குப்பின் அதே உறுதியாக திமுகவின் அடுத்தக்கட்ட தலைமையாக தானாக அடுத்த நகர்வு அவரை தேடி வந்தது.

*ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக காத்திருக்கும் இலவுக்காத்தக்கிளி என விமர்சிக்கப்பட்டார். ஆனால் சட்டப்பேரவை தேர்தல் அதை பொய்யாக்கி தனிப்பெரும்பான்மையுடன் ஸ்டாலின் முதல்வர் ஆனார். அவரது தேர்தல் அறிக்கையில் பலவற்றை நிறைவேற்றினார்.
*சிலவற்றை நிறைவேற்ற முடியவில்லை என குறைகள் வைக்கப்பட்டாலும் 8 மாதகால ஆட்சியில் குறையேதும் இல்லை என்று உள்ளாட்சியில் திமுக பெருவெற்றி பெற்றது ஸ்டாலின் யார் என்று எதிர்க்கட்சிகளுக்கு பதிலை கொடுத்து நிரூபித்து இருக்கிறார். மொத்தத்தில் திராவிட மாடலின் முதல்வர் தமிழக அரசியலில் தனித்துவமிக்க இடத்தை பிடித்ததோடு மட்டுமல்லாமல், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத நபராகவும் இருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
