தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று  முதல் தொடங்க உள்ளது. ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர உள்ளார்.

இன்று தொடங்கும் முதல் நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப் பேரவை உத்தி வைக்கப்படும்.

இந்தநிலையில், சட்டசபை கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை தோற்கடிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று  காலை 11.30 மணிக்கு அ.தி.மு.க. அலுவலகத்தில் இந்த கூட்டம் நடக்கிறது. இது குறித்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழக சட்டசபையில் 2019-2020-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்க இருக்கிறது. 

இதையொட்டி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பகல் 11.30 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டமும் அக்கட்சியில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.