*    அடிப்படையில் சினிமா கலைஞரான கருணாநிதி, தனது பிஸி ஷெட்யூல்களுக்கு நடுவில்  சில படங்களை பார்க்க தவறமாட்டார். அந்தப் படம் குறித்த தனது பார்வையையும் வெளிப்படையாக பகிர்வார். ஆனால் ஸ்டாலினிடம் அந்தப் பழக்கம் அரிது. இந்நிலையில் சமூக ஏற்றத்தாழ்வை தோலுரித்துக் காட்டும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இருவரையும் நேரில் பாராட்டினார். கூடவே தனது ட்விட்டர் பகுதியிலும் அப்படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார். 

இந்நிலையில் ’சிறுபான்மை மற்றும் தலித் வாக்கு வங்கியை தடவிக்கொடுத்துக் கொண்டே இருந்து தன் கைக்கும் வைத்திருக்க முயலும் தந்திரம்தான் இது.’ என்று ஸ்டாலினை வம்புக்கிழுத்திருக்கிறது பி.ஜே.பி. வட்டாரம். 

*    தினகரன் மற்றும் பன்னீர்செல்வத்துக்கு இடையில் நடக்கும் யுத்தத்தில் வாலண்டியராக தலையிட்டிருக்கும் தமிழிசை ‘பன்னீர்செல்வம் நடத்தியது தர்மயுத்தமா அல்லது தர்மசங்கடமான யுத்தமா என்பது தெரியாது.ஆனால் தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் எங்கள் கட்சியை சேர்ந்தவர்களை சந்திக்க பல நேரங்களில் தூதுவிட்டுள்ளனர்.’ என்று கூறியது அரசியல் அரங்கில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், தமிழிசை இப்படியான ஸ்டேட்மெண்டுகளை விட்டு தன்னை பரபரப்பாக்க முயல்வது அபத்தம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

*    சபாநாயகர் தனபாலின் வீட்டில் ரெய்டு நடத்த வேண்டும், அவர் ஒப்பந்தக்காரர்களை  பணம் கேட்டு மிரட்டுகிறார்! என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பாய்ந்திருக்கிறார். இந்நிலையில் இந்த விவகாரத்தை தனபாலுக்கு எதிரான, சாதிய ரீதியிலான அட்ராசிட்டி எனும் ரீதியில் சிலர் பேச துவங்கியுள்ளனர்.

*    சர்க்கார்  பட ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் ’நான் முதல்வரானால்!’ என்று பேசியது  அ.தி.மு.க.வை விட தி.மு.க.வில்தான் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘விஜய் பேசியதை கண்டும் காணாமல் விட்டு வேறு வேலையை பாருங்கள். இன்னும் பல நாட்களுக்கு அதை பேசிப்பேசி மக்களை மறக்கவிடாமல் செய்யாதீர்கள்.’ என்று கழக பேச்சாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தலைமையிலிருந்து உத்தரவு வந்துள்ளது. 

*    பன்னீரும், தினகரனும் சந்தித்ததை ‘தியாக வரலாறு’ என்று கிண்டலடித்திருக்கிறார் கமல்ஹாசன். இதை பன்னீர் தரப்பு பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கமலுக்கு செம்ம சூடு போட தினகரன் முடிவெடுத்திருக்கிறார். விளக்கம் கொடுக்கவே கமல் வெட்கப்படும் அளவுக்கு ஒரு விவகாரத்தை மையமாக வைத்து கமல் மீது ஒரு விமர்சனத்தை கிளப்ப தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேலுக்கு உத்தரவு வந்துள்ளது.