எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இடையே நடைபெற்ற பேச்சு  வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இரு அணிகளும் இன்று நண்பகல் 12 மணிக்கு இணையும் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த அதிமுக, பின்னர் மூன்றாக பிரிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் தலைமையில் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைய வேண்டும் என பாஜக விருப்பம் தெரிவித்ததையடுத்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதே நேரத்தில் சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் நிபந்தனை விதித்தார். இதை நிறைவேற்றினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என தெரிவித்தார்.

இதையடுத்த ஓபிஎஸ்ன்  இந்த 2 நிபந்தனைகளையும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இரு அணிகளும் இணையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக் கிழமையே அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மற்றும் ஆட்சியில் உள்ள பதவிகளை பிரிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டதால் இணைவதில் சிக்கல் நீடித்தது.


அதிமுகவின்  இரு அணிகளும் இணையும் பட்சத்தில், ஓபிஎஸ்க்கு  துணை துணை முதலமைச்சர் பதவியுடன்,  நிதித்துறை அமைச்சராக அவர் அறிவிக்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாபா பாண்டியராஜனுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும்,  பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை வகிக்கும் கே.ஏ.செங்கோட்டையனுக்கு , முதலமைச்சரிடம் இருக்கும் பொதுப்பணித்துறை வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

 

மேலும் டி.டி.வி.ஆதரவு அமைச்சர்களிடம் உள்ள நில துறைகளில் மாற்றங்கள் இருக்கும் என்றும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ்  உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் வரும் நாளை மறுநாள்  பதவி ஏற்றுக்கொள்வார்கள் என தெரிகிறது.

இந்நிலையில் இன்று நண்பகலில் 12 மணிக்கு ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வருகை தருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் அதிகாரப் பூர்வமாக இணைவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.. இதையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்துப்பட்டுள்ளது.