today karnataka election in 222 constituency

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் 2 தொகுதிகள் தவிர 222 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

கர்நாடக மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், பாஜக அங்கு ஆட்சியை பிடிக்கவும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன, இவர்களுக்கிடையே மதச்சார்பற்ற ஜனதா தளமும் இந்தப் போட்டியில் களம் காணுகிறது.

இன்று நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 2,600 மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். 4.98 கோடிக்கு மேலான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சுமார் 2.52 கோடி ஆண் வாக்காளர்களும், 2.44 கோடி பெண் வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர். தவிர, 4,552 திருநங்கைகள் வாக்களிக்க உள்ளார்கள். 

இதற்காக மாநிலம் முழுதும் 55,600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் ஆப் மூலம் வாக்குசாவடியில் எவ்வளவு கூட்டம் உள்ளது என்பதை காண வசதி செய்துள்ளனர். பெரும்பாலான கருத்து கணிப்புகள் படி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 2 தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் 222 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. பிரச்சாரத்தின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதி வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்தால் அந்த தொகுதியிலும், தேர்தல் முறைகேடுகள் காரணமாக ஆர்.ஆர்.நகர் தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.