today black day

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து ஓர் ஆண்டு முடிவடைவதையொட்டி இன்று கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும், கருப்புப்பண ஒழிப்பு தினமாக கொண்டாட பாஜகவும் அழைப்பு விடுத்துள்ளன.

கறுப்புப் பண ஒழிப்பு மற்றும் கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக்கை என கூறி கடந்த ஆண்டு இதே நாளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

நாட்டையே உலுக்கிய மத்திய அரசாங்கத்தின் முன்னறிவிப்பல்லாத இந்த செயலால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சிறு,குறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தொழில்கள் முடங்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட கொள்ளை நடவடிக்கை என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதே போல் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நாட்டை ஒரு மோசமான பொருளாதார சூழ்நிலைக்கு மோடி அரசு தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தவிர இடது சாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், இடது சாரிகள், திமுக, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதாதள் போன்ற கட்சிகளும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கடுமையான எதிர்த்து வருகின்றனர்.

இதையடுத்து இன்றைய நாளை கறுப்பு தினமாக அனுசரிக்கப் போவதாகவும், இன்று நாடு முழுதும், எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன.

அதே நேரத்தில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால் காங்கிரஸ் கோபமடைந்துள்ளதாகவும், அதனால் தான் நவம்பர் 8ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்கிறது என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாகத்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாஜக சார்பில் நவம்பர் 8 ஆம் தேதியை கருப்பு பண ஒழிப்பு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.