Asianet News TamilAsianet News Tamil

கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றனும் - ஓ.பன்னீர்செல்வம்! யாருகிட்ட இருந்து  காப்பாற்றணும்?

To save the party and the regime - O. Paneerselvam
To save the party and the regime - O. Paneerselvam
Author
First Published May 3, 2018, 8:09 AM IST


காஞ்சிபுரம்

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியதுபோல கட்சி, ஆட்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்று காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மே தினத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்தார். 

அவைத் தலைவர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, திருபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி, காஞ்சிபுரம் மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அப்போது அவர் கூட்டத்தில் பேசியது: "மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

எம்.ஜி.ஆர். மூன்று முறை முதலமைச்சராக இருந்து சிறப்பாக ஆட்சி செய்து சத்துணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவந்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் பல சாதனைகளை செய்தார். அவர் ஆரம்பித்த திட்டங்கள் யாவும் தொலைநோக்கு திட்டங்களாகும். 

எதிர்காலத்தை சிந்தித்து சிந்தித்து தீட்டிய திட்டங்களாகும். உணவு பாதுகாப்பை உறுதி செய்தார். கல்விக்காக ஏகப்பட்ட திட்டங்களை தீட்டி மாநிலத்தின் ஆண்டு வருவாயில் ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெறும் தற்போதைய அரசும் அந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தற்போது கல்விக்காக ரூ.32 ஆயிரம் கோடி ஒதுக்கி இலவச மடிக்கணினி, இலவச சைக்கிள், இலவச நோட்டுப்புத்தகம் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. 

சிறுபான்மையினரின் பாதுகாவராக ஜெயலலிதா இருந்தார். தமிழ்நாட்டின் ஜீவாதாரத்திற்கு பங்கம் ஏற்படும் சூழல் உருவாகும்போது அதை தடுக்க சட்டப் போராட்டம் நடத்தி காவிரி, முல்லை பெரியாறு போன்ற உரிமையை பெற்றுத் தந்தார் என்பது வரலாறு.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியதுபோல கட்சி, ஆட்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. காஞ்சிபுரம் நகரம் நெசவாளர்கள் நிறைந்த நகரமாகும். அனைவருக்கும் வேலைவாய்ப்பை தந்து உழைக்கும் தொழிலாளர்களை உருவாக்கும் நகரம் காஞ்சிபுரம் நகரமாகும். அறிஞர் அண்ணா கைத்தறி துணிகளை சென்னை மாநகரத்தில் வீதி வீதியாக விற்றார் என்ற வரலாறு உள்ளது.

தொழிலாளர் தினத்தை உழைக்கும் வர்க்கத்தினரின் தினமாக கொண்டாடி வருகிறோம். தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம்தான் வேலை என்ற சட்டத்தை உருவாக்கியது கம்யூனிஸ்டு நாடு அல்ல. அதை உருவாக்கியது அமெரிக்கா நாடாகும். அதைதான் நாம் மே தினமாக கொண்டாடி வருகிறோம்.

இந்தியாவில் சென்னை மாநகரில் 1923-ஆம் ஆண்டு முதன்முதலில் சிங்காரவேலர் சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகே மிகப்பெரிய பேரணி நடத்தினார் தொழிலாளர் தினத்தை கொண்டாடினார். இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிலாளர் தினத்தை கொண்டாடியது தமிழ் மாநிலம்தான்.

கிட்டத்தட்ட ரூ.5 கோடி செலவில் 1 இலட்சம் தொழிலாளர்களுக்காக நலத்திட்ட உதவிகளை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சியில் வழங்கினார். 17 அமைப்பு சாரா நல வாரியம் மூலமாக 14 இலட்சம் தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு 20 இலட்சத்து 68 ஆயிரத்து 229 பயனாளிகளுக்கு ரூ.535 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். 

17 அமைப்பு சாரா நல வாரியம் பதிவு செய்யப்பட்டு 60 வயது மூத்தோர்களுக்கு மாதம் ரூ.500 இருந்த உதவித்தொகையை ரூ.1,000 என்று உயர்த்தி கொடுத்தார். மேலும் எண்ணற்ற நலத்திட்ட உதிகளை வழங்கினார். மொத்தத்தில் தொழிலாளர்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கியவர் ஜெயலலிதா" என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வீ.வள்ளிநாயகம், மாவட்ட துணை செயலாளர் அத்திவாக்கம் செ.ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் டி.ஜீவானந்தம், அக்ரி கே.நாகராஜன், உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios