இவ்வழக்கில் முறையான விசாரணை இல்லை எனவும் தேர்வு முறைகேட்டிற்கு முதுகெலும்பாய் இருந்து துணைபோன முக்கிய நபர்கள், இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் கூறி இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி-யில் இருந்து மாற்றி சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் முகமத் ரஃபீக் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி போலீசார் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு விடைத்தாளில் மோசடி செய்து, பலரையும் தேர்ச்சி பெற வைத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கடந்த ஆண்டு 2019 ஆம் ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் டி.என்.பி.எஸ்.சி அலுவலக பணியாளர் ஓம்காந்தன் உள்ளிட்ட பல இடைத்தரகர்கள் மூலம் தமிழகம் முழுவதும் பலர் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

மேலும் தேர்வு முறைகேடு குறித்து நடத்திய விசாரணையின் போதுதான் குரூப்-2 ஏ மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. இதேபோன்று முறைகேட்டில் ஈடுபட்டு பலரும் தேர்ச்சி பெற்று அரசு ஊழியர்களாக பணிபுரிந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குரூப்-2 ஏ மற்றும் வி.ஏ.ஓ அகிய தேர்வு முறைகேடுகள் தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையை முன்னெடுத்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் பட்டியலை தயாரித்து கைது நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரம் காட்டினர்.

அந்த அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள், காவலர்கள் என 51 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். அந்த சமயம் கொரோனா தொற்று பரவல் காரணமாக, சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 மாதத்திற்கு பின் மீண்டும் தொடர்ந்த தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணையில் கூடுதலாக 46 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடு வழக்கில், இதுவரை 97 பேரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், கொரோனா காலம் என்பதால் 7 வருடத்துக்கு கீழ் உள்ள குற்றத்திற்கான தண்டனை புரிந்தவர்கள், ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்ற அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தவர்களை சொந்த ஜாமினில் விடுவித்தனர்.

இந்த விவகாரத்தில் மேலும் பல அரசு ஊழியர்கள் சிக்க உள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் சி.பி.சி.ஐ.டி தரப்பில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இவ்வழக்கில் முறையான விசாரணை இல்லை எனவும் தேர்வு முறைகேட்டிற்கு முதுகெலும்பாய் இருந்து துணைபோன முக்கிய நபர்கள், இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் கூறி இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி-யில் இருந்து மாற்றி சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் முகமத் ரஃபீக் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.