தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள வார்டுகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. 

மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. வாக்குப்பதிவு மையங்களில் இன்று நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு இயந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசிய போது, 'தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு போவார்.அதிமுகவுடன் கூட்டணி வைக்காததால் அனைத்து இடங்களிலும் பாஜக டெபாசிட் இழக்கும்’ என்று கூறினார்.