ரஜினி உட்பட யார் கட்சி தொடங்கினாலும் 2021-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வருவதையும் மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவதையும் தடுக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பி.யும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

 
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  “தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், அதிமுக களப்பணியைவிட பணப் பணியில் அதிகமாக ஈடுபட்டுள்ளது. என்றபோதும் இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பெற்றி பெறும்.
இந்தியாவில் ஜனநாயகத்துக்கு புறம்பான ஆட்சி நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் ஒரே தலைவர் ராகுல்காந்திதான்.  அவர் விரைவிலேயே மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராவார்.  தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை ஒரே அணியில் நின்று சந்தித்தன.  அந்தக் கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரும்.


நடிகர் ரஜினிகாந்த் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என எந்தக் கட்சியோடும் சேர மாட்டார். யாருக்கு கீழும் இருந்து பணியாற்ற அவரால் முடியாது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் தனியாகத்தான் நிற்பார். ரஜினி யாருடனும் கூட்டணி சேருவாரா இல்லையா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். அதை நான் சொல்ல முடியாது. அதேநேரம் எந்த நடிகர் உள்பட யார் கட்சி தொடங்கினாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும். மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார். எங்களுடைய அழுத்தமான நம்பிக்கை இது"  என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.